×

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: மழை நீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: சென்னையில் மழைவெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், நாளை  தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், இன்று சென்னை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மழைப்பொழிவு வரும் நாட்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதலே பரவலாக மழை பெய்தது. இதனால், பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து மழைநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். புறநகர் பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திருவிக நகர் மண்டலம் டிமெலஸ் சாலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ள பாதிப்புகளை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பட்டாளம் பகுதி, பட்டாளம் மார்க்கெட் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாலையில் விஜயராகவா சாலை, ஜி.என். சாலை. பசுல்லா சாலையில் வெள்ளப்பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏக்கள் பரந்தாமன், தாயகம் கவி, எழிலன், கருணாநிதி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai , Chief Minister MK Stalin's inspection of flood-affected areas in Chennai: Order to the authorities to remove rain water immediately
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...