புதிய வகை கொரோனா தமிழகத்தில் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் உதவி திட்ட அலுவலர் நியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், ஒவ்வொரு உதவி திட்ட அலுவலரை சுகாதாரத்துறை நியமிக்கிறது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு  செய்யப்படும் பரிசோதனைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத்,  பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகம் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல், பெல்ஜியம் ஆகிய ஐந்து நாடுகளில் 88 பேருக்கு உருமாறிய ஓமிக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக வருபவர்களையும், பல நாடுகளுக்கு சென்று வருபவர்களையும் கண்காணிக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் உதவி திட்ட மேலாளர் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நேற்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்கா, பிரேசில், சீனா, இஸ்ரேல் நாடுகளிலிருந்து  ஏற்கனவே வந்த 55,090 பயணிகளைபரிசோதனைகளில் 3 நபர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை டெல்டா வைரஸ் தொற்றாக

உள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். நீட் தேர்வு விலக்கு குறித்து ஆதரவு அளிக்க 12 மாநில முதல்வருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும் சென்னை விமான நிலையத்தில், உடனடி பரிசோதனை முடிவுக்கு ரூ.4,500 இருந்து ரூ.3,400 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆர்.டி.பி.சி.ஆர் கட்டணம் ரூ.700 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு கட்டணம் கிடையாது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories: