தமிழகம் முழுவதும் நடந்த மறு ஆய்வில் அம்பலம் பயிர்க்கடன் வழங்கியதில் ரூ.2,393 கோடி மோசடி: ஒழுங்கு நடவடிக்கைக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு

வேலூர்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பயிர்க்கடன் தள்ளுபடி 2021ன் கீழ் தள்ளுபடிக்கு பரிந்துரைக்கப்பட்ட கடன்களை அயல் மாவட்ட அலுவலர்களை கொண்டு மறு ஆய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் நடத்திய ஆய்வில் நிலுவை கடன் 2 லட்சத்து 50 ஆயிரத்து 733 கடன்களில் ரூ.2,393.33 கோடி அளவிற்கு விதிமீறல்கள் நடந்திருப்பது மறு ஆய்வு குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, பயிர்க்கடன் தள்ளுபடியில் விதிமீறல்கள் என கண்டறியப்பட்டவை மற்றும் கடன் அளவிற்கு அதிகமாக வழங்கப்பட்ட தொகைகளையும், சிட்டாவில் குறிப்பிடப்பட்ட நிலப்பரப்பிற்கு அதிகமாக வழங்கப்பட்ட தொகைகளையும் வசூல் செய்திடவும், அப்பயிர்க்கடன்கள் தவிர பிற தள்ளுபடிக்கு தகுதியான கடன்களை பயனாளிகளின் பட்டியலுடன் தணிக்கைக்குட்படுத்தி இறுதி பட்டியல் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

தனிநபர் ஜாமீன் மூலம் கொடுக்கப்பட்ட பயிர்க்கடன்களில் யாரேனும் ஒருவருக்கு விதிமீறல்கள் இருப்பின் அவ்விவசாயிக்கு மட்டும் கடன் வசூல் செய்யும் வரை மறுகடன் வழங்கக்கூடாது. அதே சமயத்தில், விதிமீறலின்றி முறையாக கடன் வழங்கப்பட்டு இருக்கும் மற்றொரு நபரை தள்ளுபடி பட்டியலில் சேர்த்து, அவருக்கு மட்டும் மறு கடன் வழங்கலாம். பயிர்க்கடன் தள்ளுபடியில் விதிமீறல்கள் என கண்டறியப்பட்ட தொகைகளை வசூலிக்க ஆவன செய்யுமாறும், விதிமீறலில் தொடர்புடையவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More