மன அழுத்தத்தால் பாதித்தவர் வெறித்தனம் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் அடித்து கொலை

அகர்தலா: திரிபுராவில் மனநிலை பாதித்தவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் மகள்கள், தம்பி, போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. திரிபுரா மாநிலம், கோவாய் மாவட்டத்தில் உள்ள ஷெவ்ரடாலி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் டெப்ராய். இவர் வீட்டில் இருந்த போது, திடீரென அவரது 2 மகள்கள், தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றார். அவரது மனைவியை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று, அவ்வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி அதனை ஓட்டி வந்த ஆட்டோக்காரர், அவரது மகனை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார். இதில், ஆட்டோக்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மகன் படுகாயம் அடைந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் சத்யஜித் முலிக்கையும் டெப்ராய் இரும்பு கம்பி கொண்டு தாக்கினார். அவர் அகர்தலா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தாக்குதலில் படுகாயமடைந்த டெப்ராயின் மனைவி, ஆட்டோக்காரரின் மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் எஸ்பி. ரஜிப் சென்குப்தா கூறுகையில், `பிரதீப் டெப்ராயின் மனநிலை கடந்த சில நாட்களாக சரியில்லை என்று கூறப்படுகிறது. மன அழுத்தத்தால் அவர் பாதித்துள்ளதாக தெரிகிறது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் போலீஸ் படை பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்.

Related Stories: