உயர் பிரிவு பெண்கள் பற்றி அவதூறு மன்னிப்பு கேட்டார் மபி பாஜ அமைச்சர்

போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் பிசாகுலால் சிங். கடந்த சில தினங்களுக்கு முன், அனுப்பூர் மாவட்டத்தில் நடந்த விழாவில் இவர் பேசிய போது, `தாக்கூர், தாகர் போன்ற உயர் பிரிவு பெண்களை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து, சமுதாயப் பணியாற்ற செய்யுங்கள்,’ என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில், தனது பேச்சுக்காக பிசாகுலால் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவர் கூறுகையில், `முழுவதுமாக இந்தியில் அல்லாமல், உள்ளூர் மொழியும் கலந்து பேசியதால், எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பழங்குடியினர் பிரிவை சேர்ந்த பெண்கள் மத்தியில் அவர்களின் வளர்ச்சி குறித்து பேசும்போது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படி கூறினேன். உயர் பிரிவு பெண்களை விட்டால், அவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள் என்ற பொருள்படும்படி தான் கூறினேன். இது யாருடைய மனதையும் காயப்படுத்துவதாக இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,’ என்று தெரிவித்தார்.

Related Stories:

More