இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு: சென்னையில் வரவேற்பு

சென்னை: இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்கள், 45 நாட்களுக்கு பின்பு விடுவிக்கப்பட்டனர். அதில் 18 மீனவர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தனர். நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 11ம் தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் சிவகுமார், சிவநேசன் என்பவர்களுக்கு சொந்தமான விசைப்படகில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அக்டோபர் 13ம் தேதி அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் இலங்கை  சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ஒன்றிய அரசு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையே இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் 23 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்றுமுன்தினம் விடுதலை செய்தது. தமிழக மீனவர்களை இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில் 5 பேருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மீதி 18 மீனவா்களையும் நேற்று அதிகாலை 3 மணிக்கு இலங்கையிலிருந்து சென்னைக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு அனுப்பினர்.

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஏர்இந்தியா விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. சென்னை விமான நிலையத்தில் நீண்டநேரம் அவா்களுக்கு குடியுரிமை சோதனை நடந்தது. அதன்பின்பு நேற்று காலை 7.30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து மீனவர்கள் வெளியே வந்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர். அதன்பின்பு அவா்களை வேன் மூலம், சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்தனா். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்த மீனவர்கள், ‘‘இலங்கையிலிருந்து எங்களை மீட்டெடுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றனர்.

Related Stories:

More