பெரம்பலூரில் வீட்டில் தனியாக இருந்த நகைக்கடை அதிபரை கத்தியால் மிரட்டி 103 பவுன், 9 கிலோ வெள்ளி கொள்ளை: ரூ.20 லட்சம் காருடன் தப்பினர்

பெரம்பலூர்: பெரம்பலூரில் வீட்டில் தனியாக இருந்த நகைக்கடை அதிபரை கத்தியால் மிரட்டி 103 பவுன் நகை, 9 கிலோ வெள்ளி பொருட்களை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். பெரம்பலூர் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் கருப்பண்ணன்(60). எளம்பலூர் ரோட்டில் அடுக்குமாடியில் ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு ஆனந்தராஜ் என்ற மகனும், ரேணுகா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் பரமேஸ்வரி, நேற்றுமுன்தினம் இரவு நீண்ட நேரம் ஆனதால் கடையில் உள்ள அறையில் தங்கி விட்டார். தொழில் சம்மந்தமாக ரேணுகா கடந்த 4 நாட்களுக்கு முன் சென்னைக்கும், ஆனந்தராஜ் நேற்றுமுன்தினம் மதியம் திருச்சிக்கும் சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கருப்பண்ணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மகன் வரவேண்டி இருந்ததால் கதவை பூட்டாமல் திறந்து வைத்திருந்தார். இரவு 10.30 மணியளவில் திடீரென 3 பேர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு நுழைந்தனர். கருப்பண்ணன் கழுத்தில் 2 அடி நீள கத்தியை வைத்து பணம் மற்றும் நகைகளை தருமாறு மிரட்டினர். பின்னர் பீரோவின் சாவிக்கொத்ைத வாங்கி திறந்து 103 பவுன் நகை, 9 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர்.

வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள காரையும் எடுத்து சென்று விட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.63 லட்சம். புகாரின்படி பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து, வீட்டில் பதிவான சிசிடிவி காட்சியை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.  காரில் இருந்த ஜிபிஎஸ் கருவியை ட்ரேஸ் செய்ததில் அந்த கார் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் செல்வது தெரிய வந்ததது. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய தனிப்படை போலீசார் சேலத்தில் முகாமிட்டுள்ளனர்.

Related Stories: