அதிமுக ஆட்சியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.15 கோடி நிலத்தை ஆக்கிரமித்த அதிமுக நிர்வாகி மீது வழக்கு: பாஜ நிர்வாகி மீதும் வழக்கு பாய்ந்தது

சென்னை: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, வெங்காரம் பேரையூர் கிராமத்தில் சியாமளா என்பவருக்கு தனியாக 5 ஏக்கர் விவசாய நிலமும், மகனுடன் கூட்டாக 15 ஏக்கர் விவசாய நிலமும் இருந்தது. இந்நிலையில், சியாமளா தனது குடும்பத்தினருடன் சென்னை மேடவாக்கத்தில் குடியேறினார். நிலத்தை பராமரிக்கும் பொறுப்பை மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டையை சேர்ந்த பாஜ பிரமுகர் ராஜேந்திரனிடம் 2001ல் சியாமலா ஒப்படைத்தார். ராஜேந்திரன் அந்த இடத்தை அதிமுகவை சேர்ந்த திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தியிடம் குத்தகைக்கு ஒப்படைத்ததாக தெரிகிறது. பின்னர், இருவரும் கூட்டாக சேர்ந்து நிலத்தின் உரிமையாளர் பெயரை மாற்றி போலியான ஆவணங்கள் தயாரித்து திருவாரூர் நகர அதிமுக செயலாளர் ஆர்.டி. மூர்த்தி தனது பெயரில் பத்திர பதிவு செய்துள்ளார்.

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சியாமளா, பாஜ பிரமுகர் ராஜேந்திரனிடம் தனது நிலத்தின் பத்திரத்தை கேட்டுள்ளார். அப்போது ஆர்.டி.மூர்த்தியும், ராஜேந்திரனும் ஒன்று சேர்ந்து, கொலை செய்து விடுவதாக சியாமலாவை மிரட்டியுள்ளனர். இதில் அச்சம் அடைந்த சியாமளா, ஜெயலலிதா ஆட்சியின் போது நில அபகரிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதிமுக ஆட்சியில் ஆர்.டி.மூர்த்திக்கு செல்வாக்கு இருந்ததால், போலீசார் அந்த புகாரை கிடப்பில் போட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம் நிலத்தை சியாமளாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதிமுக செயலாளர் ஆர்.டி. மூர்த்தி, ஆளும் கட்சி என்ற அதிகாரத்தில் காவல்துறை துணையுடன் நிலத்தை ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து சியாமளா, கூத்தாநல்லூர் காவல் நிலையத்திலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு நிலத்தை மீட்டு தர பலமுறை புகார் மனு அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காமல், அதிமுக நகர செயலாளர் மூர்த்திக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு நிலத்தை மீட்டு தர கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 27ம்தேதி மீண்டும் சியாமலா புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கூத்தாநல்லூர் போலீசார் அதிமுக நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி மீது நிலஅபகரிப்பு, கோர்ட் அவமதிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த பாஜ நிர்வாகி ராஜேந்திரன் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அதிமுக நிர்வாகியால் ஆக்கிரமிக்கப்பட்ட 15 ஏக்கரின் தற்போதைய மதிப்பு ரூ.15 கோடியாகும்.

Related Stories: