பூந்தமல்லியில் இருந்து ஆற்காடு வரை விடிய விடிய வேனை விரட்டி 7 டன் செம்மரக்கட்டை பறிமுதல்: சினிமா பாணியில் போலீசார் நடவடிக்கை

ஆற்காடு: சென்னை வடக்கு மண்டல சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு பூந்தமல்லியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை மடக்கி நிறுத்த முயன்றனர். ஆனால் வேன் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வேனை காரில் பின்தொடர்ந்து துரத்தினர். இதனால் வேனை டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றார். தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே பூட்டுத்தாக்கு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று அதிகாலை போலீசார் அந்த வேனை மடக்கினர். பின்னர் வேனை சோதனை செய்ததில் சுமார் 7 டன் எடையுள்ள 52 செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. செம்மரக்கட்டைகளை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், வேனை ஓட்டி வந்த சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த வெங்கடேசன்(35) என்பவரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More