ஆள்மாறாட்டம் செய்து வீட்டுமனை அபகரிப்பு: 5 பேர் கைது

சென்னை: ஆவடியில் உள்ள பொத்தூர் கிராமத்தில் 2400 சதுரஅடி வீட்டுமனையை ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பு செய்த 5 பேர் கைது போலீசார் செய்தனர். ஆவடி அடுத்த மேனாம்பேடு பாரதிநகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்த வளையாபதி(58). பொத்தூர் கிராமத்தில் இவருக்கு சொந்தமான 2400 சதுரஅடி வீட்டுமனையை ஆள்மாறாட்டம் செய்து சிலர் நில அபகரிப்பு செய்ததாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார். அதன்படி வழக்கை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

அதில் கடந்த 1994ம் ஆண்டு கிரையம் பெற்ற வீட்டுமனையை கடந்த 2019ம் ஆண்டு அதன் உரிமையாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து, போலி அடையாள ஆவணங்கள் மூலம் மொத்தம் 2400 சதுரஅடி உள்ள நிலத்தினை மூன்றாக பிரித்து தலா 800 சதுர அடி நிலமாக பிரித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பெமிலாஷர்மி தலைமையிலான தனிப்படை போலீசார், ஆள்மாறாட்டம் செய்து நிலமோசடி செய்த பொத்தூர் பகுதியை சேர்ந்த மேகநாதன்(36), அம்பத்தூரை சேர்ந்த போஸ்(46), சுரேஷ்(45),  திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த நந்தகுமார்(50), போரூர் பகுதியை சேர்ந்த முகமதுஷரிப்(38) ஆகியோரை கடந்த 25ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More