சரக்கு லாரி மோதி 2 பெண்கள் பலி: டிரைவருக்கு வலை

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் நாகலுத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பாபு. காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (26). தினமும் பாபு, நீண்ட தூரமான காரப்பேட்டைக்கு செல்ல சிரமம் அடைந்தார். இதனால், வேலை செய்யும் நிறுவனத்தின் அருகில் வாடகைக்கு வீடு தேடினார். அதன்படி, அதே பகுதியில் வீடு இருந்தது. இதையடுத்து பாபு, நேற்று முன்தினம் இரவு, மனைவி சங்கீதா, அவரது தோழி நீலவேணி (33) ஆகியோருடன் புதிய வீட்டை பார்க்க சென்றார். பின்னர், அவர், தனது நிறுவனத்துக்கு சென்றார். சங்கீதா, நீலவேணி ஆகியோர் அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டு முடித்து, சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி மளிகை பொருட்களை ஏற்றி சென்ற சரக்கு லாரி, அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதை பார்த்ததும், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிவிட்டார். தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்து, டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

More