கனமழையால் இடிந்து விழுந்த வீடுகள் அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

உத்திரமேரூர். உத்திரமேரூர் அருகே வெவ்வேறு கிராமங்களில் கன மழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்தன. அதனை பார்க்க அதிகாரிகள் யாரும் வராததால், பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் அடுத்த அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது வீட்டின் அருகே உள்ள மழைநீர் கால்வாய் தூர்ந்து இருந்தது. கடந்த வாரம் பெய்த கனமழையால், விஜயலட்சுமியின் வீடு கடும் சேதம் அடைந்தது. இதுபற்றி வருவாய்துறை அலுவலர்களுக்கு விஜயலட்சுமி புகார் அளித்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை.

இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால், விஜயலட்சுமியில் வீட்டில் மழை வெள்ளம் புகுந்து, ஒருபக்கம் திடீரென இடிந்து விழுந்தது. சுவரின் அருகே யாரும் இல்லாததால்  வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் அளித்தபோதும், யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சாலவாக்கம் - திருமுக்கூடல் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சாலவாக்கம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதேப் போல் உத்திரமேரூர் அடுத்த காக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது வீட்டில், நேற்று முன்தினம் இரவு மழைநீர் புகுந்து வீட்டின் பின்புற சுவர் இடிந்து விழுந்தது. அருகில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் இல்லை.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் களத்துமேடு ஜெசிகே நகர், அண்ணாநகர், அனுமந்தபுத்தேரி ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அப்பகுதி  மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். செங்கல்பட்டு பைபாஸ் சாலை அருகே களத்துமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதலே வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. ஆனால் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியேற்றவில்லை. இதுபற்றி, அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், நேற்று மாலை  செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், களத்துமேடு அருகே  100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து, செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம், சமரசம் பேசி உடனடியாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.

Related Stories: