புதிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் நுழைவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வீரியமிக்க ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் இந்தியாகவுக்குள் நுழைவதை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். இந்தியா உட்பட உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா வைரசைக் காட்டிலும் பல மடங்கு வீரியமிக்க புதிய வகை வைரஸ் தென் ஆப்ரிக்காவில் நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் தீவிரமாக பரவக்கூடியது என்பதால், உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. பி.1.1.529 என்ற அறிவியல் பெயரை கொண்ட இந்த வகை வைரஸ், கவலை தரும் வகையை சேர்ந்ததாக வகைப்படுத்தி உள்ள உலக சுகாதார நிறுவனம், இந்த வைரசுக்கு ‘ஒமிக்ரான்’ என பெயரிட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது அதிக பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்தும், புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் குறித்தும் பிரதமர் மோடி நேற்று உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் குறித்து அதிகாரிகள் பிரதமரிடம் விளக்கினர். இதன் தீவிர தன்மை குறித்தும், பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பிரதமர் மோடி மாநில அரசுகளுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த வைரஸ் குறித்து பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், 2வது டோஸ் தடுப்பூசியை விரைவில் மக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

அனைத்து சர்வதேச பயணிகளையும், குறிப்பாக  அதிக அபாயமுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மேலும், டிசம்பர் 15ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் வெளிநாட்டு விமான பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

* புதிய வகை கொரோனா பரவி உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு டெல்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

* தென் ஆப்ரிக்காவில் இருந்து மும்பை வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும், அவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் மும்பை மாநகர மேயர் கிசோரி அறிவித்துள்ளார்.

* பயணிகள் தவிப்பு

ஒமிக்ரான் வைரஸ் பரவிய தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 8 நாடுகளின் விமான சேவைக்கு ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. அந்த வகையில் அமெரிக்காவும் நேற்று தடை விதித்தது. இலங்கை, ஹாங்காங் போன்ற நாடுகளும் பயண தடையை அறிவித்துள்ளன. இதுபோன்ற பல நாடுகளும் திடீர் தடை விதித்துள்ளதால், தென் ஆப்ரிக்காவில் வசிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களும், அங்கு சுற்றுலா சென்றவர்களும் வெளியேற முடியாமல் சிக்கலில் தவிக்கின்றனர். உலக நாடுகளில் இருந்து தென் ஆப்ரிக்கா தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா டேட்டா

இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா புள்ளிவிவரங்கள்:

புதிதாக பாதித்தோர்    8,318 பேர்

மொத்த பாதிப்பு    3.45 கோடி

புதிய பலி    465 பேர்

மொத்த பலி    4.67 லட்சம்

சிகிச்சை பெறுவோர்    1.07 லட்சம்

* தடுப்பூசி பாதுகாப்பு: ராகுல் கோரிக்கை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘புதிய வகை கொரோனா வைரஸ் மிகவும் அபாயகரமானது. இந்த நேரத்தில் இந்திய அரசு மிகத் தீவிரமாக செயல்பட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பை வழங்க வேண்டும். மோசமான தடுப்பூசி எண்ணிக்கையை ஒரு மனிதனின் புகைப்படத்திற்கு பின்னால் நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது,’ என விமர்சித்துள்ளார்.

Related Stories: