×

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா விவகாரம் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: ஜனாதிபதிக்கு உடனே அனுப்பி வைக்க கோரிக்கை

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென சந்தித்தார். அப்போது, நீட் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு திடீரென சென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்தது. தமிழக ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது, ‘‘மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது, ஏழை - எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழு நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்தும், மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களை தீர ஆராய்ந்தும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு’ நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட முன்வடிவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கினார். இந்த சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், சிறப்பு பணி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

* நீட் தேர்வு முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து, தக்க பரிந்துரை அளித்திட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
* மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிட, மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்த பரிந்துரைகளை அரசுக்கு குழு அளித்தது.

Tags : MK Stalin , MK Stalin's meeting with the Governor on the NEED Bill passed in the Legislature: request to send it to the President immediately
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...