வீட்டை சூறையாடிய காட்டு யானை: பந்தலூர் அருகே மக்கள் பீதி

பந்தலூர்: பந்தலூர் அருகே வீட்டின் சுவரை உடைத்து பொருட்களை சூறையாடிய காட்டு யானையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே இரும்புபாலம், மரப்பாலம், பால்மேடு, அட்டிக்கொல்லி, சீனக்கொல்லி, ஆமைக்குளம், பாண்டியார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பல மாதங்களாக இரவு நேரங்களில் அரிசி ராஜா என்று அழைக்கப்படும் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடு, கடை, ரேஷன் கடைகளை இடித்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களை தின்று சேதப்படுத்துகிறது.

இதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக மரப்பாலம் பகுதிக்கு இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு வனத்துறை சார்பில் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு மரப்பாலம் சீனக்கொல்லி குடியிருப்பு பகுதியில் நுழைந்த அரிசி ராஜா யானை உணவு தேடி கூலித்தொழிலாளிகள் மகாதேவன், சந்திரலிங்கம், மோகனதாசு ஆகியோரின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது. இதனால் பொதுக்கள் பீதியடைந்துள்ளனர்.

அட்டகாசம் செய்யும் யானையை வனத்துறையினர் கும்கி யானை வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி சந்தித்து ஆறுதல் கூறி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

Related Stories: