மங்கலகுறிச்சி-பெருங்குளம் சாலையில் பாலத்தில் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்

ஏரல்: மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் சாலையில் உள்ள பாசன மடை வாய்க்கால் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது. ஏரல் அருகே மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் சாலையில் உள்ள நெல் குடோன் அருகே விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் சிறிய பாசன மடை வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த வழியாக ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி, பெருங்குளம் வழியாக ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலிக்கும், ஏரலில் இருந்து இவ்வழியாக சாயர்புரம், தூத்துக்குடிக்கு அதிக போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மேலும் மங்கலகுறிச்சி இருந்து பெருங்குளம் செல்லும் சாலையின் இருப்பக்கத்திலும் விவசாய நிலங்களாக இருப்பதால் விவசாயிகளும் அதிகளவு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பண்ணைவிளை, சாயர்புரம் பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளும் இவ்வழியாக தினசரி 500க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் பாலத்தின் சாலை மிக குறுகலாக இருப்பதாலும், பாலத்தின் தடுப்பு சுவர் இல்லாததாலும் அந்த இடத்தில் விபத்து ஏற்பட்டு வருகிறது.

தீபாவளி அன்று ஒரு லாரி பாசன மடை வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பாலத்தை அகலப்படுத்தி சாலையை விரிவுபடுத்திட வேண்டும் என இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More