தென்மாவட்டங்களில் கொட்டிய மழை: தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

நெல்லை: தென்மாவட்டங்களில் கொட்டிய மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் காலை முதல் நேற்று காலை வரை தொடர்ச்சியாக பலத்த மழை பெய்தது. நேற்று காலை 11 மணிக்கு மேல் மழை வெறித்தது. பாபநாசம் அணையிலிருந்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திறந்து விடப்பட்ட தண்ணீர், ஆங்காங்கே பெய்த மழை நீர், காட்டாற்று வெள்ளம் என வைகுண்டம் அணைக்கு 32 ஆயிரம் கனஅடி நீராக அதிகரித்துள்ளது. வைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் பெரிய அணை என கூறப்படும் 3 மதகுகள் மற்றும் 18 மணல் வாரி மதகுகள் தற்போது திறக்கப்படவில்லை. மருதூர் கீழக்கால், மேலக்கால், வடகால், தென்கால் ஆகிய கால்வாய்களையும் திறக்கவில்லை. தாமிரபரணி ஆற்றில் அதிகமாக தண்ணீர் வரும் போது கால்வாய்களை திறந்து விட்டால் மடைகள் உடைந்து விடும் என்பதால் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வைகுண்டம் அணையை தாண்டி வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி நீர் புன்னக்காயல் கடலுக்கு செல்கிறது. மருதூர் கால்களையும், வட, தென்கால்களையும், சடையநேரி கால்வாயையும் திறந்தால் இவ்வளவு தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகாதே என்று விவசாயிகள் குமுறுகின்றனர். இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் ஏரல் பழைய தாம்போதி பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் ஏரல்- குரும்பூர் பகுதிகளை இணைக்கிறது. இப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு ேபாடப்பட்டுள்ளது.

அதே ேநரத்தில் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகளவில் உள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 6 ஆயிரத்து 688.92 கனஅடிநீர் வந்து கொண்டிருந்தது. 6 ஆயிரத்து 818.45 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. பாபநாசம் அணை நீர் இருப்பு 138.75 அடியாகவும், சேர்வலாறு அணை நீர் இருப்பு 142.62 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைநீர் இருப்பு 102.20 அடியாக உயர்ந்துள்ளது. நம்பியாறு நீர் இருப்பு 22.96 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர் இருப்பு 49 அடியாகவும் உள்ளது தென்காசி மாவட்டம் கடனா அணை நீர் இருப்பு 82.70 அடியாகவும், ராமநதி நீர் இருப்பு 82 அடியாகவும், கருப்பாநதி நீர் இருப்பு 68.24 அடியாகவும் உள்ளது.

மரக்காணம் பகுதியில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட செல்லியம்மன் கோயில் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. நீரை வெளியேற்ற வழியும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை மரக்காணம் பேரூராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கு வந்த செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

டெல்டாவில் 50,500 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் நேற்று பிற்பகல் வரையில் சீர்காழி, கும்பகோணம், திருவாரூர், தஞ்சையில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 2வது நாளாக நேற்றிரவு விடிய விடிய மழை பெய்தது.  புதுக்கோட்டையில் நள்ளிரவு முதல் மழை இல்லை.  கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சியில் மிதமான மழை பெய்தது. டெல்டா முழுவதும் இன்று பல இடங்களில் மழையும், பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் 200 ஏக்கர், திருவையாறு அடுத்த குழிமாத்தூர் பகுதியில் 250 ஏக்கர்,   பட்டுக்கோட்டை உள்பட  சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர், திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10000 ஏக்கர், நாகை, வேதாரண்யம் பகுதிகளில் 5000 ஏக்கர், புதுக்கோட்டை பகுதியில் 500 ஏக்கர், திருச்சி திருவெறும்பூர், லால்குடி, சோமரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர் மற்றும் வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

கடலில் பலத்த காற்று வீசுவதால் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சுமார் 2 லட்சம் பேர் 3வது நாளாக இன்று கடலுக்கு செல்லவில்லை. நாகை புதிய நம்பியார்நகர், ஆரியநாட்டு தெரு, நாகூர் எம்ஜிஆர் நகர், வேளாங்கண்ணி செபஸ்தியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. காரைக்கால் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து திருவேட்டக்குடி-காலனி பேட் பகுதியில் கனமழையால் 364 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  திருச்சியில்  கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர், தீரன்நகர், வயலூர், லிங்கநகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Related Stories: