பெரம்பலூரில் வீட்டில் தனியாக இருந்த நகைக்கடை அதிபரை கத்தியால் மிரட்டி 103 பவுன், 9 கிலோ வெள்ளி கொள்ளை: ரூ. 20 லட்சம் மதிப்புள்ள காரும் அபேஸ்

பெரம்பலூர்: பெரம்பலூரில் வீட்டில் தனியாக இருந்த நகைக்கடை அதிபரை கத்தியை காட்டி மிரட்டி, 103 பவுன் நகை, 9 கிலோ வெள்ளிப்பொருட்களை முகமூடி ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். பெரம்பலூர் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் கருப்பண்ணன் (60). எளம்பலூர் ரோட்டில் அடுக்குமாடியில் ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி, மகன் ஆனந்தராஜ், மகள் ரேணுகா. இவர்களில் பரமேஸ்வரி, நேற்றிரவு நீண்ட நேரமாகி விட்டதால் கடையில் உள்ள அறையில் தங்கி விட்டார். ரேணுகா, கடந்த 4 நாட்களுக்கு முன் தொழில் சம்மந்தமாக சென்னைக்கும், ஆனந்தராஜ் நேற்று மதியம் திருச்சிக்கும் சென்று விட்டனர். நேற்றிரவு கருப்பண்ணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். திருச்சிக்கு சென்றிருந்த மகன் வரவேண்டி இருந்ததால், வீட்டின் கதவை பூட்டாமல், திறந்து வைத்து காத்திருந்தார். இரவு 10.30 மணியளவில் திடீரென 3 பேர், முகத்தில் துணியை கட்டி கொண்டு கருப்பண்ணன் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அங்கிருந்த கருப்பண்ணனிடம் சுமார் 2 அடி நீளமுள்ள கத்தியை கழுத்தில் வைத்து, பணம், நகைகள் தருமாறு மிரட்டினர். இதனால் பயந்து போன அவர், தன்னிடம் இருந்த பீரோவின் சாவி கொத்ைத கொடுத்தார். பின்னர் அவர்கள், பீரோவிலிருந்த வளையல், பிரேஸ்ெலட், நெக்லஸ், ஆரம், டாலர் என 103 பவுன் நகை, 9 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பினர். போகும் போது, வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த கருப்பண்ணனுக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புள்ள காரையும் எடுத்து சென்று விட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் காரின் மொத்த மதிப்பு சுமார் ரூ.63 லட்சம். இதையடுத்து, பெரம்பலூர் போலீசில் கருப்பண்ணன் புகார் செய்தார். எஸ்பி மணி மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மோப்ப நாய் சோதனை நடந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கருப்பண்ணன் தனது வீட்டு வாசலில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். அதில் கொள்ளையர்கள் காரில் ஏறி தப்பி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜிபிஆர்எஸ் மூலம் விரட்டும் போலீஸ்

கருப்பண்ணனின் காரில், ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் அவரது காரை டிரேஸ் செய்ததில், கார் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்கு துப்பாக்கி ஏந்திய தனிப்படை போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: