அறந்தாங்கி அருகே மணல் திருடுவதற்காக வெள்ளாற்றின் கரை உடைப்பு

அறந்தாங்கி : அறந்தாங்கி அருகே மணல் திருடுவதற்காக வெள்ளாற்றின் கரையை சமூக விரோதிகள் வெட்டி சேதப்படுத்தியுள்ளதால் தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஓடும் காட்டாறான வெள்ளாறு மணல் வளம் நிறைந்த ஆறாகும். இந்த ஆற்றில் அரசின் சார்பில் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் விற்பனை செய்யப்பட்டது. பல இடங்களில் சிலர் சட்ட விரோதமாக மணல் எடுத்து விற்பனை செய்து வந்தனர்.

பல்வேறு இடங்களில் குடிநீர் ஆதாரத்தை கருத்தில் கொண்டு கிராம மக்கள் மணல் எடுக்க நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளனர். இருப்பினும் கோர்ட்டு உத்தரவை மீறி சமூக விரோதிகள் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். அறந்தாங்கியை அடுத்த மேலப்பஞ்சாத்தி பகுதியில் வெள்ளாற்றில் மணல் வளம் நிறைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் அரசு மணல் குவாரிகள் அமைத்து மணல் எடுக்க அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் மேலப்பஞ்சாத்தி வெள்ளாற்றில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மாட்டுவண்டிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளாற்றில் இருந்து மணலை ஏற்றி வருவதற்கு வசதியாக சுமார் 10 அடி உயரமுள்ள வெள்ளாற்றின் கரையை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் அறந்தாங்கி சப் கலெக்டராக இருந்த ஆனந்த்மோகன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து மணல் திருடுவதற்காக சேதப்படுத்தப்பட்ட வெள்ளாற்றின் கரையை சீரமைக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சில மாதங்கள் அப்பகுதியில் மணல் திருட்டு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பஞ்சாத்தி அருகே மணல் கடத்துவதற்காக சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் வெள்ளாற்றின் கரையை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் சேதப்படுத்தப்பட்ட வெள்ளாற்றின் கரை வழியாக மாட்டு வண்டிகளில் சென்று வெள்ளாற்றில் இருந்து இரவு பகலாக மணல் திருட்டில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், வெள்ளாற்றின் முக்கிய நீராதரமாக விளங்கும் கவிநாடு கண்மாயின் உபரி நீர் வெளியேறி வருவதாலும், எந்த நேரமும் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மேலப்பஞ்சாத்தியில் மணல் திருடுவதற்காக சேதப்படுத்தப்பட்டுள்ள பகுதி வழியாக ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

எனவே மேலப்பஞ்சாத்தி பகுதியில் மணல் திருடுவதற்காக வெள்ளாற்றின் கரையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதப்படுத்தப்பட்டுள்ள கரையை உடனே சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More