சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது; இன்றோ, நாளையோ முழுமையாக அகற்றி விடுவோம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்

சென்னை: சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் கூறினார். இன்றோ, நாளையோ முழுமையாக அகற்றி விடுவோம் எனவும் கூறினார். காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

சென்னை: தமிழ்நாட்டில் 25.10.2021 முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்,  37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 21.98 மி.மீ. ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் 133.69 மி.மீட்டரும்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101.56 மி.மீட்டரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 91.08 மி.மீட்டரும், சென்னையில் 78.39 மி.மீட்டரும், மயிலாடுதுறை  மாவட்டத்தில் 72.66 மி.மீட்டரும், கடலூர் மாவட்டத்தில், 56.42 மி.மீட்டரும். திருவாரூர் மாவட்டத்தில், 48.31 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. ஆவடி (199 மி.மீ.), மாமல்லபுரம் (181.1 மி.மீ.), செங்கல்பட்டு (177 மி.மீ.), திருக்கழுகுக்குன்றம் (162 மி.மீ.), மதுராந்தகம் (154 மி.மீ.), சோழவரம் (148 மி.மீ.), பரங்கிப்பேட்டை (146.6 மி.மீ.), திருவள்ளூர் (126 மி.மீ.), காஞ்சிபுரம் (121.4 மி.மீ.), செம்பரம்பாக்கம் (120.4 மி.மீ.), கொத்தவாச்சேரி (120 மி.மீ.), பொன்னேரி (118.2), அம்பத்தூர் (117 மி.மீ.) ஆகிய 13 இடங்களில் மிக கனமழையும், 36 இடங்களில் கனமழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 27.11.2021 வரை 603.38 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 345.70 மி.மீட்டரை விட 75 சதவீதம் கூடுதல் ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில், விழுப்புரம் (145%), திருப்பத்தூர் (138%), கோயம்புத்தூர் (116%), கன்னியாகுமரி (105%), திருச்சிராப்பள்ளி (95%) ஆகிய 5 மாவட்டங்களில் மிக அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் விபரம்:

* மேட்டூர் அணையிலிருந்து 23,607 கன அடியும்,

* செங்குன்றத்திலிருந்து 1,664 கன அடியும்,

* செம்பரம்பாக்கத்திலிருந்து 2,111 கன அடியும்,

* பூண்டியிலிருந்து 4,218 கன அடியும்,

* சோழவரத்திலிருந்து 600 கன அடியும்

பாபநாசத்திலிருந்து 6818 கன அடியும்,

சாத்தனூரிலிருந்து 6913 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 26.11.2021 நாளிட்ட அறிக்கையில், இன்று (27.11.2021) திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, கரூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில்  இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். 28.11.2021 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், அரியலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை  மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள், செங்கல்பட்டு மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 குழுவும் மீட்பு பணிகளை மேற்கொள்ள நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில், பழவங்குடி கிராமத்தில் 7 குடும்பங்கள் ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 30 நபர்கள் இதுவரை தாழ்வான பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டத்தில், முன்னெச்சரிக்கையாக 200 நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3388 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் மழை நீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 100 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர் சாத்தான்குளம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடம்பா ஏரியில் ஏற்பட்டுள்ள சிறிய உடைப்பு உடனே சரிசெய்யப்பட்டுள்ளது. மேலும், வேலூர் மற்றும் தாமிரபரணி அடிச்சநல்லூரில் ஏற்பட்ட உடைப்புகளும் நேற்று இரவு சரிசெய்யப்பட்டு, கோரம்பள்ளம் ஏரிக்கு நீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு 204 மோட்டார்கள், 15 டாங்கர்கள் (Sullage Tanker) நீர் தேங்கியுள்ள பகுதிகளில், நீர் வெளியேற்ற பயன்படுத்தப்படுகிறது.     சென்னை வடக்கில், 12 பகுதிகளிலும், சென்னை தெற்கில், 8 பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  இவ்விடங்களில், மழை நீரை வெளியேற்றும் பணி பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில், 7 பகுதிகளில், மழை நீர் தேங்கியுள்ளதால் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  இவ்விடங்களில், மழை நீரை வெளியேற்றும் பணி மாவட்ட நிருவாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிவாரண முகாம்கள்:

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 123 முகாம்களில், 11329 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 653 நபர்கள் 6 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று 825 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* திருவள்ளூர் மாவட்டத்தில், 155 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,

* காஞ்சிபுரம் மாவட்டத்தில், 25 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,

* செங்கல்பட்டு மாவட்டத்தில், 181 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும்,

* கடலூர் மாவட்டத்தில், 97 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,

* நாகப்பட்டினம் மாவட்டத்தில், 4088 நபர்கள் 9 நிவாரண முகாம்களிலும்,

* புதுக்கோட்டை மாவட்டத்தில், 414 நபர்கள் 8 நிவாரண முகாம்களிலும்,

* தூத்துக்குடி மாவட்டத்தில், 922 நபர்கள் 13 நிவாரண முகாம்களிலும்,

* அரியலூர் மாவட்டத்தில், 47 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,

* பெரம்பலூர் மாவட்டத்தில், 524 நபர்கள் 22 நிவாரண முகாம்களிலும்,

* திண்டுக்கல் மாவட்டத்தில், 155 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,

* இராணிப்பேட்டை மாவட்டத்தில், 63 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,

* திருப்பத்தூர் மாவட்டத்தில், 637 நபர்கள், 16 நிவாரண முகாம்களிலும்,

* திருவண்ணாமலை மாவட்டத்தில், 107 நபர்கள் 5 நிவாரண முகாம்களிலும்,

* வேலூர் மாவட்டத்தில், 3914 நபர்கள் 38 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்:

* கடந்த 24 மணி நேரத்தில், அரியலூர் (1), திருநெல்வேலி (1),  திருப்பூர் (1) மாவட்டங்களில் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

* 344 கால்நடை இறப்பு பதிவாகியுள்ளது.

* 2075 குடிசைகள் பகுதியாகவும், 130 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 2205 குடிசைகளும், 272 வீடுகள் பகுதியாகவும், 1 வீடு முழுமையாகவும், ஆக மொத்தம் 273 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி:

* மழை நீர் தேங்கியுள்ள 220 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

* சாலைகளில் விழுந்த 9 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13268 மருத்துவ முகாம்கள் மூலம் 4,54,953 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

* மழை நீர் சூழ்ந்த பகுதிகளில், மழை நீரை வெளியேற்ற 46 JCB-களும், 847 அதிக திறன் கொண்ட பம்புகளும் தயார் நிலையில் உள்ளன.

* 34,863 புகார்கள் வரப்பெற்று, 32,698 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.  எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

More