வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நவ, 29ல் தாக்கல்..விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் : ஒன்றிய அரசு

புதுடெல்லி: ஒன்றிய அரசு கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் புறநகர் எல்லைகளில் கடந்த ஓராண்டாக போராடி வருகின்றனர்.இதையடுத்து, விரைவில் உபி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக கடந்த வாரம் பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெரும் மசோதா வரும் 29ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முதல் நாளிலேயே தாக்கல் செய்யப்படும் என்று ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் அமைச்சர், பயிர் பன்முகப்படுத்தல்,ஜீரோ-பட்ஜெட் விவசாயம், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க பிரதமர் மோடி குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இந்தக் குழுவின் அரசியலமைப்பின் மூலம், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை மீதான கோரிக்கை நிறைவேறுகிறது.

மூன்று விவசாயச் சட்டங்கள் ரத்து என்ற அறிவிப்புக்குப் பிறகு, விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.பயிர்கழிவுகள் எரிப்பதை குற்றமாக கருத கூடாது என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.இந்தக் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைப் பொறுத்த வரை, அது மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. வழக்குகள் தொடர்பாக மாநில அரசுகளே முடிவெடுப்பார்கள். மாநில அரசுகள் தங்கள் மாநில கொள்கையின்படி இழப்பீடு வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கும், என்றார்.

Related Stories: