தொடர் மழை எதிரொலி வெள்ளிப்பொருட்கள் ஆர்டர் 50% சரிந்தது

* வாரத்தில் மூன்று நாள் மட்டுமே பட்டறைகள் இயக்கம்

சேலம் : வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சேலம் வெள்ளிப் பொருட்களின் ஆர்டர் 50 சதவீதம் குறைந்துள்ளதாக வெள்ளி வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சேலத்தில்தான் அதிகளவில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தவிர கும்பகோணம், சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலத்தில் வெள்ளி கால்கொலுசு, அரைஞாண் கொடி, குங்குமச்சிமிழ், வெள்ளித் தட்டு, காமாட்சி விளக்கு, வெள்ளிக்குடம், குத்துவிளக்கு உள்பட எண்ணற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டு ஏற்பட்ட கொரோனா 2வது அலையால் வெள்ளிப்பொருட்கள் விற்பனை குறைந்தது.

இதன் காரணமாக மே, ஜூன் மாதங்களில் நூற்றுக்கணக்கான பட்டறைகள் மூடப்பட்டது. இத்தொழிலை நம்பி இருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் போதிய வருமானமின்றி பாதிக்கப்பட்டனர். கொரோனா தாக்கம் குறைந்த பின்பு, கடந்த ஆகஸ்ட்டில் இருந்து வழக்கமான விற்பனை தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த அக்டோபரில் இருந்து  வெள்ளிப்பொருட்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. தீபாவளி பண்டிகையின்போது வடமாநில ஆர்டர் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்டர் வந்தது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு முன்பே வெள்ளிப்பொருட்களின் விற்பனை களைகட்டியது. அதேநேரத்தில் தற்போது வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் மழையால் ஆர்டர்கள் குறைந்துள்ளதாக வெள்ளி வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் வெள்ளி கைவினைஞர்கள் சங்க செயலாளர் ஆனந்தராஜன் கூறியதாவது: சேலத்தில் செவ்வாய்ப்பேட்டை, குகை, தாதகாப்பட்டி, பள்ளப்பட்டி, திருவாக்கவுண்டனூர், கந்தம்பட்டி, சிவதாபுரம், பனங்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளிப்பட்டறைகள் உள்ளன. இந்த வெள்ளிப்பட்டறைகளில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் அவ்வளவு சீக்கிரம் கருக்காது. அதனால் சேலம் வெள்ளிப்பொருட்களுக்கு வடமாநிலங்களில் அமோக வரவேற்பு உள்ளது.  

 இந்த நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபரில் வட மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு பெரிய அளவில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நடப்பு மாதத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் விவசாய தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, பொதுமக்களிடம் பணம் இருப்பு குறைந்தள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெள்ளிப்பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது.

வழக்கமாக இக்கால கட்டத்தில் பொங்கல் ஆர்டர் வரும். ஆனால் தொடர் மழை காரணமாக நடப்பாண்டு இதுநாள் வரை பொங்கல் ஆர்டர் வரவில்லை. வெள்ளிப்பொருட்களின் விற்பனை குறைந்ததால் ₹66 ஆயிரத்திற்கு விற்ற ஒரு கிலோ வெள்ளி ₹64 ஆயிரத்து 500 என சரிந்துள்ளது. ஆர்டர் இல்லாததால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வெள்ளிப்பட்டறைகள் இயங்குகிறது. இதன் காரணமாக தொழிலாளர்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More