கனமழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி :நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக ஊட்டியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கிய மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 6 மாதமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு கன மழை பெய்யும் வானிலை மையம் எச்சரித்தது. அதற்கு ஏற்றார் போல், கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது ஊட்டியில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இரு நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றாற் போல் நேற்று முன்தினம் இரவு ஊட்டி, மஞ்சூர், கோத்தகிரி, குன்னூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் லேசான மண் சரிவுகள் ஏற்பட்டன.

 ஊட்டி ஏடிசி ., பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையம் செல்லும் சாலையில் ராட்சத கற்பூர மரம் ஒன்று விழுந்தது. இதனால் இவ்வழி தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மரத்தை தீயணைப்புத் துறையினர் அகற்றினர். இதனால் இந்த வழித்தடத்தில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று ஊட்டியில் காலை முதலே கடும் மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால், ஊட்டியில் கடும் குளிர் நிலவியது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மி.மீ.,ல்: ஊட்டி 24, நவடுவட்டம் 7, கிளன்மார்கன் 10, குந்தா 73, அவலாஞ்சி 55, எமரால்டு 33, கெத்தை 34, கிண்ணக்கொரை 33, அப்பர்பவானி 21, குன்னூர் 28.5, பர்லியார் 30, கேத்தி 21, கோத்தகிரி 29, கொடநாடு 42.

Related Stories: