தொடர் மழை எதிரொலி எமரால்டு பகுதியில் பயிரிடப்பட்ட முட்டைகோஸ்கள் அழுகி சேதம்

ஊட்டி :நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், ஊட்டி அருகேயுள்ள எமரால்டு பகுதியில் முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் அழுகி சேதமடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். பின், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும்.

 இடைப்பட்ட காலங்களில் மழை குறைந்தே காணப்படும். வெயில் அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கி தென்மேற்கு பருவமழை இதுவரை விட்டபாடில்லை. தொடர்ந்து கடந்த 6 மாதமாக மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் மழை அதிகம் பெய்யக் கூடிய பகுதிகளில் மலை காய்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, எமரால்டு, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறிகளுக்கு போதுமான சூரிய ஒளி கிடைக்காத நிலையில், காய்கறிகள் அழுகியுள்ளன.இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பல ஏக்கர் பரப்பளவிலான முட்டைகோஸ் பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளன.

 மேலும், தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் அழுகியுள்ளன. இதனால் மலை காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More