குடியிருப்பு பகுதியில் புகுந்த 3 மலைப்பாம்புகளால் பீதி

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே திருவுடையார்பட்டி, மருத்துவக்குடிபட்டி மற்றும் சேவினிப்பட்டி பகுதிகளில் வீட்டின் அருகே நேற்று புகுந்த 12 அடி நீளமுள்ள மூன்று மலைப்பாம்புகளை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.

திருப்புத்தூர் ஒன்றியம் மகிபாலன்பட்டி ஊராட்சி மருத்துவக்குடிபட்டியைச் சேர்ந்தவர் பாக்கியம்(40). நேற்று இவரது வீட்டின் அருகே உள்ள கூரை வீட்டில் சுமார் 12 அடி நீளமுள்ள வெங்கனத்தி இனத்தைச்சேர்ந்த மலைப்பாம்பு கிடந்துள்ளது.

 இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாக்கியம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, தியணைப்பு நிலைய அலுவலர் சடையாண்டி தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதேபோன்று திருப்புத்தூர் அருகே சேவினிப்பட்டி கிராமத்தில் உள்ள அழகுமீனா(38) என்பவரது வீட்டின் அருகில் கிடந்த சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.

  இதேபோன்று திருப்பத்தூர் அருகே விடையார்பட்டி சுப்பிரமணி என்பவரது வீட்டில் இருந்த 12 அடி மலைப்பாம்பையும் பிடித்தனர். பின்னர் இந்த மூன்று பாம்புகளையும் திருப்புத்தூர் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மதகுபட்டி அருகே உள்ள மண் மலை பகுதியில் இரண்டு பாம்புகளையும் பத்திரமாக விட்டனர்.

Related Stories: