டெல்டாவை விட கொடூரமான வீரியமிக்க புதிய வகை கொரோனாவிற்கு ஒமைக்ரான் என பெயர் சூட்டியது உலக சுகாதார நிறுவனம்!!

ஜெனிவா: டெல்டா உள்ளிட்ட இதுவரை மாற்றமடைந்த கொரோனா வைரஸ்களிலேயே மிகவும் கொடியதாக 50 பிறழ்வுகளுடன் புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இது தடுப்பூசிகளை தாண்டி தாக்கக் கூடியது என்பதால் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் அச்சமடைந்துள்ளன.

பி.1.1.529 என்ற அறிவியல் பூர்வ பெயரை கொண்ட இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. மற்ற வைரஸ் பிறழ்வுகளிலேயே மிக மோசமாக 50 பிறழ்வுகளை இந்த புதிய வகை வைரஸ் கொண்டிருப்பதே பீதிக்கு காரணமாகும். இதன் முள் புரதத்தில் (ஸ்பைக் புரோட்டின்) மட்டுமே 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. இந்த முள்ளை பயன்படுத்தி தான் வைரஸ்கள் மனித உடலுக்குள் நுழையும், நோய் மண்டலத்தை தாக்கும். எனவே, கொரோனா தடுப்பூசிகள் அனைத்துமே இந்த புரதத்தை  குறிவைத்து தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவில் பெரும் உயிர் பலியை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய டெல்டா வைரசில் கூட இவ்வளவு பிறழ்வுகள் இல்லை என்பதால், புதிய வைரஸ் மிகவும் கவலை தரக்கூடியதாக இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை கண்டறியப்பட்டத்தில் இதுவே வீரியம் மிக்க கொரோனா வகை எனக்கூறும் உலக சுகாதார அமைப்பு, தடுப்பூசி, சிகிச்சை முறைகள் மீதான தாக்கத்தை கண்டறிய சில வாரங்கள் ஆகும் என கூறியுள்ளது.   

ஆப்ரிக்க நாடுகளின் பயணிகளுக்கு தடை

புதிய வகை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

* ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஏற்கனவே கொரோனா அதிகரித்து வருவதால், தென் ஆப்ரிக்காவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

* தென் ஆப்ரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா உள்ளிட்ட 6 ஆப்ரிக்க நாடுகளை சிவப்பு பட்டியலில் இங்கிலாந்து சேர்த்துள்ளது. அந்நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

* தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 7 ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்களையும், கடந்த 14 நாட்களில் அங்கு சென்று வந்தவர்களையும் சிங்கப்பூரில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

* தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

எத்தனை பேருக்கு பரவியது?

தென் ஆப்ரிக்காவில் 22 பேருக்கும், போட்ஸ்வானாவில் 4 பேருக்கும், ஹாங்காங் மற்றும் இஸ்ரேலில் ஒருவருக்கும் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் ஒரே நோயாளியிடம் இருந்து இந்த புதிய வகை வைரஸ் உருவாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக இஸ்ரேலில் இப்போதே கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories: