சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து பாதுகாப்பு கருதி 9,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்: மீண்டும் மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: சென்னையில் மீண்டும் மழை பெய்வதாலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து தண்ணீர் வருவதால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இந்த ஏரிகள் அனைத்தும் அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. ஏரிகளுக்கு வரும் நீர்வரத்துக்கு ஏற்ப உபரி நீரை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.

 நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், ஆந்திர மாநிலத்தில் கனமழையால் தமிழக எல்லையில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக அம்மபள்ளி அணையில் இருந்து நகரி ஆறு வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் மழைநீர் ஆகியவை இணைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு இன்்னும் குறையவில்லை. இதனால் நேற்று முன்தினம் நிலவரப்படி 5 ஏரிகளையும் சேர்த்து நீர் வரத்து வினாடிக்கு 7,762 கனஅடியாக இருந்தது. இந்த ஏரிகளில் இருந்து வெளியேற்றும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 11000 கனஅடியாக இருந்தது.

  நேற்று காலை நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு 4248 கனஅடி தண்ணீர் வருகிறது. அதேநேரம் பூண்டி ஏரியில் அப்படியே அந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோன்று, சோழவரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 372 கனஅடியாக உள்ளது. அங்கிருந்து 615 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு 803 கனஅடி தண்ணீர் வருகிறது. அங்கிருந்து 1706 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை நீர்தேக்கத்துக்கு 97 கனஅடி தண்ணீர் வருகிறது. அவை அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோன்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 3050 கனஅடியாக உள்ளது. அதிலிருந்து 2,147 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த 5 ஏரிகளில் தற்போது மொத்தமாக 9,030 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

 தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளதாலும், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதாலும் ஏரிகளின் பாதுகாப்பு கருதியே உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தமாக இன்று காலை நிலவரப்படி 8570 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த ஏரிகளில் இருந்து மொத்தமாக 8,813 கனஅடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு வழக்கத்தை விட கூடுதலாக தற்போது 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More