விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு தக்காளி மைதானத்தில் லாரிகளுக்கு அனுமதியா?...சிஎம்டிஏ திங்கட்கிழமை விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தை தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா என்று சி.எம்.டி.ஏ. மற்றும் மார்க்கெட் கமிட்டி ஆகியவை வரும் திங்கட்கிழமை விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயம்பேட்டில் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 1200 சதுர அடி 2,400 சதுர அடி அளவு கொண்ட கடைகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த இடம் உள்ளது.

சிறிய கடைக்காரர்கள் அந்த மைதானத்தை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.  சி.எம்.டி.ஏ. தரப்பில் லாரிகளில் வந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளது. அதை மீறி அந்த மைதானத்திலேயே விற்பனை நடந்ததால் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, லாரிகள் நிறுத்தக்கூடிய இடத்தில் விற்பனையை மேற்கொள்ளக்கூடாது என்ற விதிகள் சரியானதுதான் என்ற போதிலும், தற்போதுள்ள தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கருத்தில் கொண்டு நான்கைந்து சிறு வியாபாரிகள் இணைந்து ஒரு லாரியை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் பட்சத்தில் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்து சரக்கை இறக்க மட்டும் அனுமதி அளிக்க முடியுமா? என்று கேட்டதுடன் தக்காளி விலை குறையும் வரை ஓரிரு வாரங்களுக்கு லாரிகளை நிறுத்திக்கொள்ள அனுமதிப்பது குறித்து சி.எம்.டி.ஏ., கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: