ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் உடல் கரை ஒதுங்கியது

சென்னை: துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜாராம்.  இவரது மகன் சுரேஷ் (36). கடற்படை அதிகாரி. இவர் டெல்லியில் லெப்டினன்ட் கமாண்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், சவ் பர்ணிகா (8) மகளும் உள்ளனர். சுரேஷ் தனது மனைவியின் தங்கை திருமண நிகழ்ச்சிக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துரைப்பாக்கத்திற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் குடும்பத்தோடு கோவளம் கடற்கரைக்கு சென்றார். அப்போது, சுரேஷ் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டார். அப்போது, ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார்.

இதை பார்த்த, அங்கிருந்த சில மீனவர்கள் ஓடி வந்து படகு மூலம் கடலில் தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மனைவி திவ்யா மூலம் டெல்லியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடற்படை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையை சேர்ந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் 2 நாட்களாக தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை அருகே சுரேஷின் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் கடற்படை அதிகாரிகள் விரைந்து வந்து சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More