ராணுவ சொத்துகளை வணிக பயனுக்கு குத்தகை விடுவதைவிட ராணுவ உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தலாம்: உயர் நீதிமன்றம் யோசனை

சென்னை: சென்னை ரத்தன் பஜார், எஸ்பிளனேடு அருகேயுள்ள ஃப்ரேசர் பிரிட்ஜ் சாலை, ஈவினிங் பஜார் ஆகிய இடங்களில் ராணுவத்துக்கு சொந்தமான நிலங்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டன. இந்த நிலத்தில் முன்னாள் ராணுவ மேஜர் சத்தியமூர்த்தி கோபாலன், பவானி ஏஜென்சி, கோவிந்தராஜுலு முதலியார் அண்ட்கோ உள்ளிட்ட மூவருக்கு பெட்ரோல் பங்க் அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் வழங்கியது. கடந்த 2006 முதல் 15 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். இந்நிலையில், இந்த நிலங்களுக்கான வாடகை பாக்கி 18 கோடியே 56 லட்சம் ரூபாய் செலுத்தாததால் நிலத்தை காலி செய்யும்படி பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு ராணுவ சொத்து நிர்வாக அதிகாரி கடந்த மார்ச் 31ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து 3 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், சம்பந்தப்பட்ட இடத்திற்கான லைசென்சை தொடர வேணடாம் என்றும் ராணுவ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாடகை பிரச்னையை முடித்துக் கொள்ளலாம் என்றும் ஏற்கனவே முடிவு செய்துள்ளோம் என்றார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், பெட்ரோல் பங்குகளை மூடினால் மனுதாரர்களின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டு தெருவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுவிடும். பிரச்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கும் ராணுவத்துறைக்கும்தான். எங்களை வெளியேற வேண்டும் என்று ராணுவம் நோட்டீசோ உத்தரவோ போட முடியாது என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. அவர் நியாயமான ஓய்வூதியம் பெற்று வருகிறார். ராணுவத்தின் பல்வேறு பலன்களை அனுபவித்து வருகிறார். அதனால், அவரின் பொருளாதார நிலை குறைந்துவிடும் என்பதை ஏற்க முடியாது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கும் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போது இந்த வழக்கை தொடர மனுதாரர்களுக்கு எந்த அடிப்படை தகுதியும் இல்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் எந்த நிவாரணம் கோர உரிமையில்லை.  

ராணுவத்துக்கு சொந்தமான இடத்தை காலி செய்து 2 மாதங்களில் ராணுவ எஸ்டேட் அதிகாரியிடம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒப்படைக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தி நிலுவை வாடகை தொகையை பைசல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், ராணுவத்துக்கு சொந்தமான சொத்துகளை வணிக பயன்பாட்டுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டு, வாடகையை வசூலிக்க இயலாமல் உள்ள பாதுகாப்பு துறை, அந்த சொத்துகளை ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்து வழக்கை முடித்துவைத்தார்.

Related Stories:

More