இடைத்தரகரை யாரும் நம்ப வேண்டாம் மதிப்பெண் அடிப்படையில்தான் நர்ஸ், சுகாதார பணியாளர்கள் நியமனங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 7,296 செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இடங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நியமிக்கப்படுவர்.  யாரும் எந்த ஒரு இடைத்தரகரையும் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளரை சந்தித்து பேசினார். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 36 லட்சத்து 31 ஆயிரத்து 843 பேர் மருத்துவ பயன்பெற்றுள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு, புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். புதிதாக நர்சுகள், சுகாதார பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 4 ஆயிரத்து 848 செவிலியர்கள், 2 ஆயிரத்து 448 சுகாதார பணியாளர்களை பணியில் அமர்த்திக் கொள்வதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா பணியில் 4 ஆயிரத்து 570 செவிலியர்கள் மற்றும் 1,646 சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அனைத்து பணியிடங்களும் நிரந்தரம் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தாலும், கொரோனா காலத்தில் அவர்கள் பணியாற்றிய காரணத்தினால் கருணை அடிப்படையில் 20 மதிப்பெண்கள் கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள செவிலியர்கள், சுகாதார பணியாளர் பணியிடங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நிரப்பப்பட இருக்கிறது. எனவே யாரும் எந்த ஒரு இடைத்தரகரையும் நம்ப வேண்டாம். இதில் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பணி நியமனங்கள் இருக்கும். எனவே புதிய 7 ஆயிரத்து 296 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று பார்த்தாலே போதும்.

விபத்துகளுக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய 124 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கிறது. தற்போது அவை 300 வாகனங்களாக உயர்த்தப்பட இருகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு, குறிப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஹாங்காங்கில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

நம்மை காக்கும் 48

மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலை  துறை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, நம்மை காக்கும் 48  என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்தார். இந்த திட்டத்தில் ‘நம்மை  காக்கும் 48’ என்ற புதிய திட்டம் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையால்  செயல்படுத்தப்பட இருக்கிறது. அடுத்த மாதம் நம்மை காக்கும் 48 திட்டம்  தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் 609 அரசு மற்றும்  தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் சிறப்பு  அம்சமாக, தமிழக நெடுஞ்சாலைகளில், விபத்து நிகழ்கிற போது, எந்த நாட்டை  சார்ந்தவராக இருந்தாலும், எந்த மாநிலத்தை சார்ந்தவராக இருந்தாலும், அந்த  விபத்தில் அவர் பாதிப்புக்கு உள்ளாகிறார் என்றால் அவருக்கு உடனடியாக ரூ.1  லட்சத்தை தமிழக அரசு செலவிட இருக்கிறது. இது இந்தியாவுக்கே முன்மாதிரியான  திட்டம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories:

More