ஓபிஎஸ் ஆதரவு மாஜி எம்எல்ஏ பாஜவுக்கு சென்றது ஏன்?...பரபரப்பு தகவல்கள்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினருமான சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாஜவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூட்டணி கட்சியில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஒருங்கிணைப்புக்குழுவின் உறுப்பினருமான சோழவந்தான் மாணிக்கம் இரு நாளுக்கு முன்னர், திடீரென அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜவில் தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் இணைந்தார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:

 ஜெயலலிதா இருந்தபோது மதுரையில் புறநகர் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பலரும் சாலைக்கு இடம் கொடுக்க மறுத்தபோது, மாணிக்கம் மட்டும் தன்னுடைய இடத்தை சாலை அமைக்க கொடுத்தார். அதன்பின்னர் மற்றவர்களும் தங்களுடைய நிலங்களை கொடுத்தனர். இதை சொல்லித்தான் ஓ.பன்னீர்செல்வம், மாணிக்கத்திற்கு சோழவந்தான் தொகுதியை வாங்கிக் கொடுத்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், திடீரென சசிகலாவுக்கு எதிராக கொடி பிடித்தார். திடீரென ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தப்போவதாக அறிவித்தார். அப்போது அவருக்கு முதல் ஆதரவு தெரிவித்தவர் மாணிக்கம். இவருக்குப் பின்னர்தான் 11 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

 இதனால், எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தேர்தலுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. ஒருங்கிணைப்புக்குழு அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுத்து வந்தார். கடைசியில் எடப்பாடி இறங்கி வந்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 5 பேரும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 6 பேரும் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அதில் ஓபிஎஸ் அணியில் பழனி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினத்துக்கு பரிந்துறை செய்யப்பட்டது. ஆனால் பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் அழுத்தம் கொடுத்ததால் அவரை மாற்றிவிட்டு மாணிக்கத்தை பரிந்துறை செய்தார். அந்த அளவுக்கு பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருந்தார்.  

ஆனால் தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுக்கு தேர்தல் செலவு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பல மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களிடம் கட்சியில் இருந்து பணம் வழங்கப்பட்டது. அதில் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராகவும், ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் உள்ள உதயகுமாரிடம் அந்த மாவட்டத்தில் உள்ள 3 தொகுதியின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களின் செலவுக்கு 12 ஸ்வீட் பாக்ஸ்கள் ஒதுக்கப்பட்டன. மாணிக்கத்திற்கு ஒரு பாக்ஸ் கூட வரவில்லை. இதனால் தனக்கு பணம் வரவில்லை என்று எடப்பாடியை சந்தித்து மாணிக்கம் புகார் தெரிவித்தார். எடப்பாடியோ, உங்கள் தொகுதிக்கு பொறுப்பாளர் அமைச்சர் உதயகுமார். அவரிடம் கேளுங்கள்.

அவர் கொடுப்பார் என்று கூறியுள்ளார். இதனால் மாணிக்கம், உதயகுமாரிடம் கேட்டபோது இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று கூறி வந்துள்ளார். கடைசி நாட்களில், என்னிடம் பணம் இல்லை. நானே கஷ்டப்படுகிறேன் என்று கையை விரித்து விட்டார்.  கையில் பணம் இல்லாமல் மாணிக்கம் தேர்தல் செலவு செய்ய முடியாமல் திணறி விட்டார். இதனால் தனக்கு பணம் வரவில்லை என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, அவர் 4 ஸ்வீட் பாக்ஸ்களை கொடுத்துள்ளார். அதை வைத்து கட்சியினருக்கு மட்டும் செலவு செய்துள்ளார். ஆனால் மக்களுக்கு பணம் கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் உதயகுமார் கொடுக்கவில்லை.

மேலும், தென் மாவட்டத்தில் தன்னை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக போட்டதால்தான் உதயகுமார் ஒதுக்குகிறார் என்று கட்சி தலைவர்களிடம் புகார் செய்துள்ளார். இது பற்றி ஓ.பன்னீர்செல்வத்திடமும் புகார் செய்துள்ளார். ஆனால் அவரும் இது குறித்து விசாரிக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்தவர், பாஜவில் இணைந்துள்ளார். அதேநேரத்தில் பாஜவும், தனது கூட்டணி கட்சியின் நிர்வாகி என்று தெரிந்தும் சேர்ந்துக் கொண்டனர். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணிக்கத்தைப் போல அதிருப்தியில் இருக்கும் பலரும் கட்சி மாறுவார்கள் என்ற பரபரப்பு அதிமுகவில் நிலவுகிறது.

மாணிக்கத்தைப் போல அதிருப்தியில் இருக்கும் பலரும் கட்சி மாறுவார்கள் என்ற பரபரப்பு அதிமுகவில் நிலவுகிறது

Related Stories: