அதிக பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களை பிரித்து புதிதாக சார்பதிவாளர் அலுவலகங்கள்: சென்னையில் மட்டும் 5 சார்பதிவாளர் அலுவலகங்கள் தோற்றுவிப்பு

சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. வீடு, விளைநிலை உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த எல்லைகள் பெரும்பாலும் வருவாய் மாவட்டங்கள், வருவாய் வட்டம், வருவாய் கிராமங்களை கொண்டு தான் அமைக்க வேண்டும். அப்போது தான் பட்டா மாறுதல் போன்ற எந்த பிரச்சனையும் வராது. ஆனால், ஒரு சில சார்பதிவாளர் அலுவலங்களில் வருவாய் கிராமங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதனால், பட்டா மாறுதல் பெறுவதில் பல்வேறு சிக்கல் எழுவதால் வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இதையேற்று, ஒரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் வருவாய் கிராமங்கள் அமையும் வகையில் பதிவு எல்லைகள் சீரமைக்கப்படும் என்று பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். இதை தொடர்ந்து சார்பதிவர் எல்லைகள் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில், எல்லைகள் மாற்றும் போது அதிக பத்திரங்கள் பதிவாகும் சார்பதிவாளர்கள் அலுவலங்களின் எண்ணிக்ைக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு மாறும் போது சார்பதிவாளர் அலுவலகங்களும் புதிதாக உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 5 சார்பதிவாளர்கள் அலுவலகங்கள் தோற்றுவிக்கப்படவுள்ளது. இதே போன்று, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட மற்ற பதிவு மாவட்டங்களில் 50 சார்பதிவாளர் அலுவலகங்களும் புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது.

தற்போது, அதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில், வருவாய் மாவட்டங்களுக்கேற்ப பதிவு மாவட்டம் இல்லாத திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவாரூர், பெரம்பலூர் ஆகியவை புதிதாக பதிவு மாவட்டங்களாக உருவாக்கப்படுகிறது. இதற்காக, வருவாய் மாவட்டங்களை அடிப்படையாக வைத்து இந்த பதிவு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது என்று பதிவுத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: