கோயிலுக்கு தானமாக தரும் சொத்துகளை பக்தர்களின் விருப்பத்திற்கு பயன்படுத்தாதது பாவம்: ஐகோர்ட் கருத்து

சென்னை:  கோவை ரங்கே கவுடர் தெருவில் உள்ள மாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை 1960ல் குத்தகைக்கு எடுத்து ஸ்ரீதரன் என்பவர் வியாபாரம் நடத்தி வந்தார். இந்த நிலையில், அந்த சொத்துக்கான வாடகையை 17,200 ரூபாயாக உயர்த்தி 2016ம் ஆண்டு கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் இதுவரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 200 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளார். அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ”கடந்த 1960ல் வழங்கப்பட்ட குத்தகை 5 ஆண்டுகளில் முடிந்துவிட்ட நிலையில், தற்போது மனுதாரர் ஆக்கிரமிப்பாளர் தான். எனவே, அவரது கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கோயில் நிர்வாகம் மனுதாரரை 3 மாதங்களுக்குள் கோயில் இடத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் சொத்துகளை அறநிலையத்துறை பாதுகாக்க தவறும் பட்சத்தில் உயர் நீதிமன்றம் இதை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்காமல் அந்த கோயிலின் பாதுகாவலனாக வருகிறது. இந்த வழக்கு மட்டுமல்லாமல், அறநிலைய தொடர்புடைய பல்வேறு வழக்குகளிலும், கோயில் சொத்துகளின் வாடகை முறையாக வசூலிப்பதில்லை.

அதிகாரிகளும், அறங்காவலர்களும் கைகோர்த்து செயல்பட்டு சட்டவிரோத ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.  கோயில் மற்றும் பக்தர்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டுமென்ற பெரிய எதிர்பார்ப்புகளுடன் பல உன்னத ஆத்மாக்கள், தங்கள் சம்பாத்தியத்தை மத வழிபாட்டு தலங்களுக்கு தானமாக எழுதிவைத்துள்ளனர். அவர்களின் விருப்பத்தை கவுரவப்படுத்தாமல் அதிகாரிகள் செயல்படுவது பாவச்செயலாகும். இதன்மூலம் அந்த வழிபாட்டு தலங்களில் உள்ள தெய்வங்களின் உரிமைகள் மீறப்படுகிறது. இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: