கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும்  டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இலங்கை அருகே உள்ள அந்த காற்று சுழற்சி, வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வருவதாலும், வங்கக் கடல் பரப்பில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வருவதாலும், தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக ஆந்திராவின் நெல்லூர் முதல் தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி  மாவட்டம் வரை மழை நேற்று முழுவதும் பெய்தது.

அதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி,  மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இந்த சூழ்நிலை இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த காற்று சுழற்சி 30ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று, கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை மற்றும் மிக கனமழை  பெய்யும். அதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.  28ம் தேதியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்யும்.  இது தவிர அரியலூர், திருச்சி, கருர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை  பெய்யும். அதேபோல, 29ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

சென்னையில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்.  இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தொடர் மழை காரணமாகவும், ஏற்கெனவே பெய்த மழையின் பாதிப்புகளையும்  கணக்கில் எடுத்துக் கொண்டு, அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 3 இடங்களில் அதிக கனமழையும்,4 இடங்களில் கன முதல்  மிக கனமழையும், 70 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் 31 செமீ மழையும் பெய்துள்ளது.

இந்த வளி மண்டல காற்று சுழற்சி புயலாக மாற வாய்ப்பில்லை என்றும், குமரிக் கடல், தென் மேற்கு  வங்கக் கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 50 கிமீ வேகத்தில் இன்று வீசும்.  வரும் 29ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகரக் கூடும். இதன் காரணமாகவும் அந்தமான் கடற்பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னையில் 67% அதிகம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து  கடந்த அக்டோபர் மாதம் முதல் நேற்று வரை  தமிழகம் புதுச்சேரியில்  58 செமீ மழை பெய்துள்ளது. இயல்பாக 34 செமீ பெய்ய வேண்டும். இது 70 சதவீதம் அதிகம். சென்னை மாவட்டத்தில் நேற்று வரை 98 செமீ மழை பெய்துள்ளது. இயல்பாக  59 செமீ மழை பெய்ய வேண்டும். இது  67 சதவீதம் அதிகம் கடந்த  3 ஆண்டை பொருத்தவரையில் ஒரு நாளைய சராசரி மழை தமிழகம் புதுவையில் நேற்று தான் அதிகபட்சமாக 4 செமீ மழை பெய்துள்ளது.

Related Stories: