நெல்லை, தூத்துக்குடியை புரட்டிப் போட்ட கனமழை: தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்: டெல்டா மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள் மிதக்கிறது

நெல்லை: நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கொட்டிய கன மழையால்  தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தெற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய  தமிழக கடலோரத்தில் நீடித்து வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றின்  திசை மாறுபாடு காரணமாக, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இல்லை என  சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் தெற்கு வங்கக் கடல்  பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்  கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி  மாவட்டங்களில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி  வரை இடைவிடாமல் நீடித்த கன மழை சற்று வேகம் தணிந்தாலும், தூறல் மழையாக  விடியவிடிய நேற்று காலை வரை நீடித்தது.  நேற்று காலை 6 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 306 மிமீ மழை பதிவானது.  தூத்துக்குடியில் 266 மிமீ,  திருச்செந்தூரில் 248 மிமீ மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் கோயிலில் வரலாறு காணாத அளவில் தண்ணீர்  புகுந்த நிலையில், இரவோடு இரவாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல் வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி  மாநகரில் தற்காலிக பஸ் நிலையம், தருவை விளையாட்டு மைதானம் ஆகியவை  தண்ணீரில் மிதக்கின்றன. இவை தவிர ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் வரண்டியவேல் அருகே வெள்ள நீர் ஓடியதால் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால் திருச்செந்தூர் - தூத்துக்குடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையில் கனமழை கொட்டியதால் பல இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கன மழை காரணமாக  தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் நெல்லை குறுக்குத்துறை  முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தைப்பூச மண்டபம், உள்ளிட்ட ஏராளமான  பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தாமிரபரணியின் இரு கரைகளையும்  தொட்டுக் கொண்டு வெள்ளம் ஓடுகிறது. நேற்று மாலை நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் 25 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் ஓடியது. இத்துடன் சிற்றாற்று வெள்ளமும் கலப்பதால் தாமிரபரணியின் கடைசி அணைக்கட்டான வைகுண்டம் அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீருக்கு மேல் வீணாக கடலுக்கு  செல்கிறது.

குமரி: குமரியில் விடிய, விடிய பெய்த கன  மழையால் பேச்சிப்பாறை, ெபருஞ்சாணி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.  இதனால் தாமிரபரணி ஆறு, கோதையாறு, பரளியாறு, வள்ளியாறு மற்றும் பழையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து மலையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.  டெல்டா: திருச்சியில் விடிய விடிய விட்டு விட்டு பெய்த மழை நேற்று காலை 11 மணி வரை நீடித்தது. திருச்சி மாவட்டம் பச்சமலை பகுதியில் சோபனாபுரம் அருகே டாப்செங்காட்டுப்பட்டி செல்லும் சாலையில் 7 இடங்களிலும், மூலக்காட்டிலிருந்து மணலோடை செல்லும் சாலையில் 6 இடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குண்டாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கத்தம்பூர், செங்காட்டுப்பட்டி, செல்லிபாளையம் பகுதிகளில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. பெரம்பலூர் செஞ்சேரிக்கும்-பாளையத்துக்கும் இடையே மாற்றுப்பாதை பாலம் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  திருவாரூர் பழைய பேருந்து நிலையம், தெற்குவீதி, கமலாலயம் வடகரை, விஜயபுரம் அரசு தாய்-சேய் நல மருத்துவமனை, கொடிக்கால்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராமகேரோடு, விஐபி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலை தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால் பூதலூரில் சம்பா நடவு மேற்கொண்டுள்ள வயல்களில் தண்ணீர் புகுந்ததில் சுமார் 200 ஏக்கர் நிலங்களில் பயிர்கள் மூழ்கியுள்ளன.

சுவர் இடிந்து குழந்தை உட்பட 3 பேர் பலி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள  கீழப்பத்தையில் குடிசை வீட்டின் சுவர் இடிந்ததில், 3 வயது குழந்தை  அருள்பேபி பரிதாபமாக உயிரிழந்தாள். அவரது தந்தை, தாய் படுகாயங்களுடன்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், குடிசையின் சுவர் இடிந்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பழங்காமூரில் பச்சையம்மாள் என்ற 70 வயது மூதாட்டியும், அரியலூரில் சின்னபிள்ளை(70) என்பவரும் பலியானார்கள்.திருவண்ணாமலை வேட்டவலத்தில் கணேசன்(65) மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

ஆற்றில் ‘செல்பி’ எடுத்தவர் சடலமாக மீட்பு

வேலூர் மாவட்டம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியாத்தத்தில் ஆற்றில் இறங்கி செல்பி எடுத்த ரமேஷ்(50) வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். 2 நாளாக நடந்த தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரது சடலம் நேற்று மீட்கப்பட்டது.

Related Stories: