மோடி பங்கேற்ற அரசியலமைப்பு தின விழாவை காங்., திமுக உட்பட 15 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு: குளிர்கால கூட்டத் தொடரில் இணைந்து செயல்பட ஆயத்தம்

புதுடெல்லி: ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் பாஜ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த அரசியலமைப்பு தின விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மேலும், வருகின்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஓரணியாக இருந்து அரசுக்கு நெருக்கடி தரவும் ஆயத்தமாகி வருகின்றன. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26ம் தேதி தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டது. சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் விழாவையொட்டி கடந்த 2015ம் ஆண்டு முதல், தேசிய சட்ட தினத்தை அரசியலமைப்பு தினமாக கொண்டாட பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதன்படி, அரசியலமைப்பு தின விழா நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

நாடாளுமன்றத்தில் பாஜ அரசுக்கு எதிராக ஓரணியாக குரல் கொடுத்து வரும் காங்கிரஸ், திமுக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் பாஜ அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்க நேற்று முன்தினமே முடிவு செய்தன. அதன்படி 15 கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.  பாஜவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  கட்சிகளைத் தவிர, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர  சமிதி, பகுஜன் சமாஜ் மற்றும் தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் மட்டும்  பங்கேற்றன.  வரும் 29ம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இதற்கு முன்பாக நடக்கும் நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகள் மொத்தமாக புறக்கணித்திருப்பதன் மூலம், குளிர்கால கூட்டத் தொடரில் ஓரணியாக செயல்பட ஆயத்தமாகி உள்ளன.

இது தொடர்பாக, குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான வரும் 29ம் தேதி கூட்டத் தொடர் தொடங்கும் முன்பாக கூட்டு ஆலோசனை நடத்த எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய மக்கள் பிரச்னை குறித்து ஆலோசிக்க வருமாறு காங்கிரசின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதனால் குளிர்கால கூட்டத் தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தேசம் முதலில்’ என்ற உணர்வு அரசியலில் குறைந்து விட்டது

அரசியலமைப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘அரசியலமைப்பு நமது தலைசிறந்த தலைவர்களாலும், நாட்டிற்காக போராடி சுதந்திரம் பெற்றுத் தந்தவர்களாலும் எழுதப்பட்டது. நமது அரசியல் சாசனத்தின் சாரம்சமான ‘தேசம் முதலில்’ என்ற உணர்வு இன்று அரசியலில் குறைந்துவிட்டது. நமது அரசியல் அமைப்புச் சட்டமும் அதன் எழுத்தும் ஆவியும் மறைந்துவிடும் அளவுக்கு அரசியல் முன்னுரிமை பெற்றுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பக்கத்தையாவது பின்பற்றுகிறோமா? நாம் அரசியலமைப்பை எழுத்திலும் உணர்விலும் பின்பற்றுகிறோமா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சி எந்த அரசாங்கத்தினுடையதோ, அரசியல் கட்சியினுடையதோ, பிரதமரின் நிகழ்வோ அல்ல. இந்த நாளை கொண்டாட காட்டப்படும் எதிர்ப்புகள் இப்போது மட்டுமல்ல, அரசியலமைப்பு தினம் கொண்டாட அரசு முடிவு செய்த போது சில தரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்தன. ஆனால், அம்பேத்கர் பற்றிய விஷயமாக இருப்பதால், அத்தகைய எதிர்ப்புகளை கேட்க நாடு தயாராக இல்லை. ஒரு குடும்பத்தில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தகுதியாலும், மக்களின் ஆசிர்வாதத்தாலும் கட்சியில் சேருவது குடும்ப கட்சியாக மாற்றாது. ஆனால், தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பமே கட்சியை நடத்துவது, ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். ஜனநாயக பண்பை இழந்த கட்சிகள் எப்படி ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்?’’ என்றார்.

‘அவையை முடக்காதீர்கள்’

அரசியலமைப்பு தின விழா நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும்,’ என்றார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில், ‘அரசியலமைப்பின் நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். கூச்சல் குழப்பத்தால் இடையூறு செய்து அவையை முடக்கக் கூடாது,’ என வலியுறுத்தினார். அனைத்து தரப்பு மக்களின் நலனிற்காக மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ராகுல் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘நீதியும் உரிமையும் அனைவருக்கும் சமமானது. எனவே அரசியலமைப்பு வெறும் ஆவணம் அல்ல, நம் அனைவரின் பொறுப்பாகும். அனைவருக்கும் அரசியலமைப்பு தின வாழ்த்துக்கள்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: