செம்மரம் கடத்தியபோது வனத்துறை விரட்டியது: லாரியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற தமிழக தொழிலாளி பலி: மேலும் பலர் காயங்களுடன் ஓட்டம்

திருமலை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் காஜிப்பேட்டை வனத்துறை அதிகாரிகள் நல்லமல்லா வனப்பகுதியில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த இருந்தது தெரியவந்தது. அவர்களை வனத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். ஆனா்ல்,  அங்கிருந்த கூலித்தொழிலாளர்கள் லாரியில் ஏறி தப்பிச் சென்றனர். வனத்துறையினரும் லாரியை பின்தொடர்ந்து வாகனத்தில் விரட்டிச் சென்றனர். இந்நிலையில், காஜிப்பேட்டை- புரோதட்டூர் சாலையில் மைதுக்கூர் அருகே சென்றபோது ஓடிக்கொண்டிருந்த லாரியில் இருந்த கூலித்தொழிலாளர்கள் கீழே குதித்து வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். இதில் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

லாரியில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்த தர்மபுரியை சேர்ந்த ஒரு கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேலு, சந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் மீட்ட வனத்துறையினர் சிகிச்சைக்காக சிம்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேபோல் தப்பி ஓட முயன்றவர்களில் கமல்ஹாசன், சுப்பிரமணி, தீர்த்தமலை முருகன் ஆகியோரை வனத்துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர். மேலும், லாரியுடன் 5 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், செம்மரங்களை வெட்டி கடத்திய கூலித்தொழிலாளர்கள் தாக்கியதில் காஜிபேட்டை வன அதிகாரி காஜாவலி காயமடைந்து உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

More