சட்டோகிராம்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவித்து வருகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. சட்டோகிராமில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ஷத்மன், சைப், நஜ்மல் தலா 14 ரன் எடுத்து வெளியேற, கேப்டன் மோமினுல் ஹக் 6 ரன்னில் அவுட்டானார். வங்கதேசம் 16.2 ஓவரில் 49 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், முஷ்பிகுர் - லிட்டன் தாஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 99 ரன்னை தொட்டபோது ரன் அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பிய தாஸ், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.