×

வங்கதேசம் நிதான ஆட்டம்

சட்டோகிராம்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவித்து வருகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. சட்டோகிராமில் நேற்று தொடங்கிய  முதல் டெஸ்டில்  டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ஷத்மன், சைப், நஜ்மல் தலா 14 ரன் எடுத்து வெளியேற, கேப்டன் மோமினுல் ஹக் 6 ரன்னில் அவுட்டானார். வங்கதேசம் 16.2 ஓவரில் 49 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், முஷ்பிகுர் - லிட்டன் தாஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 99 ரன்னை தொட்டபோது ரன் அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பிய தாஸ், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

மறு முனையில் முஷ்பிகுர் தனது 24வது டெஸ்ட்  அரை சதத்தை விளாசினார். இந்த ஜோடியை பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. முதல்நாள் முடிவில்  வங்கதேசம் 85 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்துள்ளது. லிட்டன் தாஸ் 113, முஷ்பிகுர் 82 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : Bangladesh, Pakistan
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி