நியூசிலாந்து வலுவான தொடக்கம்: அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 16வது இந்திய வீரர் ஷ்ரேயாஸ்

கான்பூர்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 345 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 129 ரன் எடுத்துள்ளது. கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்திருந்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 75 ரன், ஜடேஜா 50 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜடேஜா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் சவுத்தீ வேகத்தில் கிளீன் போல்டானார். ஷ்ரேயாஸ் - ஜடேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த சாஹா 1 ரன் மட்டுமே எடுத்து சவுத்தீ பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிளண்டெல் வசம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 105 ரன் எடுத்து (171 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) சவுத்தீ வேகத்தில் யங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அக்சர் படேல் 3 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளிக்க, ஓரளவு தாக்குப்பிடித்த அஷ்வின் 38 ரன் எடுத்து (56 பந்து, 5 பவுண்டரி) அஜாஸ் படேல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இஷாந்த் டக் அவுட்டாகி வெளியேற, இந்தியா 111.1 ஓவரில் 345 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. உமேஷ் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ 27.4 ஓவரில் 6 மெய்டன் உள்பட 69 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். கைல் ஜேமிசன் 3, அஜாஸ் படேக் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து டாம் லாதம், வில் யங் இணைந்து நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கினர். இருவரும் பொறுப்புடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, இவர்களைப் பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். 2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன் எடுத்துள்ளது. டாம் லாதம் 50 ரன் (165 பந்து, 4 பவுண்டரி), வில் யங் 75 ரன்னுடன் (180 பந்து, 12 பவுண்டரி) களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories:

More