முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பராமரிப்பு பணிகளை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளஅனுமதிக்கும்படி கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்க கோரியும், அணை பாதுகாப்பு மற்றும் இயக்க முறைகள் சரியாக இல்லை என்றும் ஜாய் ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.  இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் உமாபதி நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

வல்லக்கடவு முதல் முல்லைப் பெரியாறு வரையிலான 5 கிமீ நீளமுள்ள மலைப்பாதையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு தேவையான பொருட்களை தமிழக அதிகாரிகள் எடுத்து செல்வதற்கு அனுமதிக்கும்படி, கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். முல்லைப் பெரியாறின் பேபி அணைப் பகுதியில் இருக்கும் 15 தேவையற்ற மரங்களை வெட்டுவதற்கு வழங்கிய அனுமதியை கேரள அரசு ரத்து செய்துள்ளது. எனவே, இந்த மரங்களை வெட்டவும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.  அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழையை அளவிட  மழைமானியை பொருத்துவதற்கும் தமிழக அரசுக்கு வழங்கியிருந்த அனுமதியை கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது. அந்த கருவியை பொருத்த அனுமதிக்கும்படியும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: