நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்: முன்னாள் காங்கிரஸ் எம்பி பேச்சு

காஞ்சிபுரம்: டெல்லியில் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, காஞ்சிபுரத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் தேரடியில் தொமுச கவுன்சில் மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சாரங்கன், ஐஎன்டியுசி மாநில செயற்குழு உறுப்பினர் இராம.நீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், விவசாயிகள் சங்க மாநில துணைசெயலாளர் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு, சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு,  திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஏஐடியுசி தலைவர் சங்கையா, எச்எம்எஸ் பொது செயலாளர் ஆபத் சகாயம், அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மகேந்திரன், பொருளாளர் ராமச்சந்திரன், தொமுச கவுன்சில் மாவட்ட செயலாளர் சுந்தரவரதன், போக்குவரத்துக் கழக தொமுச செயலாளர் ரவி, பொருளாளர் அரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் முன்னாள் எம்பி விஸ்வநாதன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது. விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக மோடி அறிவித்துள்ளார். இதற்கிடையில் போரட்டத்தின்போது 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து அவர்களது குடும்பத்தினர் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை வெளிநாட்டு கைக்கூலிகளின் சதி என பிரதமர் மோடி கூறுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதுபோல் நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.போராட்டதின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ₹1 கோடியும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குற்றம் இழைத்த பாண்டிய மன்னன் பதவி விலகியதுபோல, பிரதமர் மோடியும் இந்த கூட்டத்தொடரிலேயே பதவி விலக வேண்டும் என பேசினார்.

Related Stories: