காஞ்சி, செங்கை மாவட்டங்களில் விடியவிடிய பெய்த மழையால் 830 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழையால் 830 ஏரிகள் நிரம்பின. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிய நிலையில், வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சுழற்றியடித்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு முதல் விடியவிடிய கனமழை பெய்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி, உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 341 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 38 ஏரிகள் 70 சதவீதமும், 2 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 489 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 39 ஏரிகள் 70 சதவீதத்துக்கு அதிகமாக நிரம்பியுள்ளன.

பாலாறு மற்றும் செய்யாற்றில் நீர்வரத்து தொடர்ந்து கொண்டிருப்பதால்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகறல், திருமுக்கூடல் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி நீர்வீழ்ச்சி போல் உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அறிவித்துள்ள மற்ற தடுப்பணைகளையும் விரைவில் கட்டினால், மழைநீர் வீணாக கடலில் கலக்காமல் சேமிக்கப்பட்டு நீர் ஆதாரம் பெருகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குடிநீரில் கலந்து வரும் மீன்கள்: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சியில் கூடலூர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள தமிழ்நாடு அரசு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் சார்பில், குழாய்கள் தெருக்கள் முழுவதும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழக்கம்போல் நேற்று, குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது, குடிநீருடன் கலந்து மீன்கள் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் குழாய் இணைப்புகளில் சேதம் ஏற்பட்டு, உடைந்து இருப்பதால்,  மீன்கள் குடிநீருடன் கலந்து வந்திருக்கலாம்.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, குழாய் உடைப்பை சரி செய்து, தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.

குளமாக மாறிய அரசு பள்ளி

திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய முட்டுக்காடு ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படுகின்றன. அதில், தற்போது 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருகின்றனர். இப்பள்ளியை சுற்றி மதிற்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி வளாகத்தினை சுற்றியுள்ள தெருக்களில் சிமென்ட் சாலைகள் உயர்த்தி அமைத்ததால், பள்ளி வளாகம் பள்ளமாகிவிட்டது. கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கனமழையால், இந்த தொடக்கப்பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு தண்ணீர் குளம்போல் தேங்கியது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளி வளாகத்தில் இருந்த மழைநீரை முட்டுக்காடு ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் மோட்டார் மூலம் அகற்றினர். ஆனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வெள்ளநீரால், மீண்டும் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், உள்ளூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மூலம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வகையில் சிமென்ட் கற்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பெரும்பாலான பெற்றோர், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். தற்போது வரை 20 குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் முட்டுக்காடு அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், மண் நிரப்பி மழைநீர் தேங்காதபடி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டுக்கு ஆரஞ்சு அலட்

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் முதல், இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால், மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பாலாறு உள்பட ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் கனமழையால் ஜிஎஸ்டி சாலை, பஸ் நிலையம், மார்க்கெட் உள்பட பல்வேறு பள்ளி, கல்லூரி வளாகங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாவட்டத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. ஒன்றிய, பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியது. மேலும், பாலாற்றில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலட் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More