திருமங்கலத்தில் கனமழை: மேலக்கோட்டை தரைப்பாலத்தில் தண்ணீரில் சிக்கிய கார்

திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் மேலக்கோட்டை ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய தண்ணீரில் கார் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. திருமங்கலம் அடுத்துள்ள மேலக்கோட்டையில் ரயில்வே தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலத்தை கடந்து தான் மேலக்கோட்டை, மைக்குடி, கூடக்கோவில், காரியாபட்டி செல்ல வேண்டும்.

கனமழையால் இந்த தரைப்பாலம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் நேற்று இரவு முதல் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து திருமங்கலம் நோக்கி  நள்ளிரவில் வந்த கார் தரைப்பாலத்தில் தேங்கிய தண்ணீரில் சிக்கியது. காரில் வந்தவர்கள் அவசர அவசரமாக கார் கதவுகளை திறந்து தண்ணீரில் நீந்தி வெளியேறியதால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தண்ணீரில் சிக்கிய காரை இன்று காலை வரை எடுக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து மேலக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில், தரைப்பாலத்தை சூழ்ந்த தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. மேலக்கோட்டை தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் திருமங்கலம்-காரியபட்டி இடையே போக்குவரத்து மாற்றுப்பாதைவழியாக நேற்று இயக்கப்பட்டது.

மழைக்கு 6 வீடுகள் இடிந்தன

மழையால் திருமங்கலம் அடுத்துள்ள புல்லமுத்தூரை சேர்ந்த சந்திரமதி, வேணுகோபால், சண்முகராஜ் ஆகியோரின் வீடுகள் இடிந்து விழுந்தன. தங்களாசேரி கிராமத்தை சேர்ந்த கொண்டுரெட்டி மற்றும் பச்சி என்பவரின் வீடுகளும் இடிந்துள்ளன. அச்சம்பட்டியை சேர்ந்த மங்கம்மாள் என்ற பெண்ணின் வீடும் இடிந்துள்ளது. வீடுகளின் மதிப்பீடுகளை வருவாய்த்துறையினர் அளவீடு செய்து வருகின்றனர்.

Related Stories: