பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: பருத்தி விவசாயிகள் அவதி

சின்னாளபட்டி: ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் பொட்டாஷ் உர தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்டது கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், கோனூர், நவாபட்டி, கரிசல்பட்டி, கசவனம்பட்டி, இராமநாதபுரம், ஆலத்தூரான்பட்டி மற்றும் தருமத்துப்பட்டி, கட்டசின்னாம்பட்டி காமாட்சிபுரம், சில்வார்பட்டி, கதிரயன்குளம். கரிசல் பூமியான இப்பகுதியில், ஆண்டுதோறும் பருவ மழைக்கு பின் பருத்தி பயிரிட்டு வருவதை அப்பகுதி விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்தாண்டு பருத்தி செடிகள் காய் விடும்முன்பு செவட்டை நோய், பச்சைப்பூச்சி மற்றும் அஸ்வினிபூச்சிகளால் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்து பருத்தி பயிரிடுவதில் ஆர்வமாக உள்ளனர். கடந்த 1 மாதத்துக்கு முன்பு இப்பகுதி விவசாயிகள் பருத்தி செடிகடிகளை பயிரிட்டனர். தற்போது செடிகள் நன்கு வளர்ந்து வரும், நிலையில் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் தெளித்து வருகின்றனர். இது குறித்து கதிரயன்குளத்தை சேர்ந்த விவசாயி கணேசன் கூறுகையில், ‘‘கடந்த வருடம் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

இதனால் 1 கிலோ பருத்தி ரூ.50க்குதான் விலை போனது. இந்த வருடம் பருத்திக்கு உரிய விலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். 1 கிலோ பருத்தி ரூ.80 முதல் ரூ.100 வரை விற்றால்தான் லாபம் கிடைக்கும். பொட்டாஷ் உர தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். 

Related Stories: