நாகர்கோவில் மாநகர பகுதியில் சுற்றிதிரியும் மாடுகள்: மழைகாரணமாக பிடிப்பதில் சிக்கல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதியில் சுற்றிதிரியும் மாடுகளை மழைக்காரணமாக பிடிப்பதில் சிக்கல் இருந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.  நாகர்கோவில் மாநகர பகுதியில் தற்போது புத்தன்அணை குடிநீர் திட்டத்திற்கும், பாதாளசாக்கடை திட்டத்திற்கும் குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு பல சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் நாகர்கோவில் நகர பகுதியில் காலை, மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து மழை பெய்து வருதால், சாலைகள் மேலும் மோசமடைந்துள்ளது. வாகன ஓட்டிகள், பைக்கில் செல்பவர்கள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மாநகர பகுதியில் மாடுகள் அதிக அளவு நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், விபத்துக்களும் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மாநகர பகுதியில் மாடுகள் நடமாட்டம் இருந்தால், மாடுகளை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகர ஆணையர் ஆஷாஅஜித் எச்சரித்து இருந்தார்.

இருப்பினும் வடசேரி, இடலாக்குடி பகுதிகளில் மாடுகள் தொடர்ந்து வலம் வந்தவண்ணம் உள்ளது. ஆணையர் உத்தரவிட்டும், மாடுபிடிக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து மாநகர அதிகாரிகளியிடம் கேட்டபோது, மாநகர பகுதியில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாடுகளை அவிழ்த்துவிட்டால், மாடுகள் பிடிக்கப்பட்டு, அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளோம்.

அதனை மீறி மாநகர பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாடுகளை பிடிக்கும்போது, மாடுகளுக்கு காயம் ஏற்படாத வகையில் மாடுபிடிப்பவர்களை அழைத்துள்ளோம். மழை பெய்து வருவதால், மாடுகளை பிடிக்கும்போது மாடுகளுக்கு காயம் ஏற்படவாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் மழை நின்றவுடன், மாநகர பகுதியில் சுற்றிதிரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

Related Stories:

More