கொரோனாவால் பெற்றோரை இழந்த குமரியில் 82 குழந்தைகளுக்கு ரூ2.52 கோடி நிவாரண நிதி: கலெக்டர் தகவல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 3 குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த 79 குழந்தைகள் உள்பட 82 குழந்தைகளுக்கு ரூ.2.52 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார். கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பெருந்ெதாற்று உலகையே ஆட்டி படைத்து வருகிறது. உயிரிழப்புகள், பொருளாதார வீழ்ச்சி என பல நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி இன்னும் மீள முடியாமல் தவிக்கின்றன. இந்தியாவிலும் கொரோனா பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் முடங்கியது. தமிழகத்திலும் கொரோனா கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்றன.

இந்த நிலையில் கடந்த மே மாதம், தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டார். அந்த வகையில் தடுப்பு பணிகளுடன், பொதுமக்களுக்கு ரேஷனில் தலா ரூ.4 ஆயிரம் நிவாரண ெபாருட்கள் வழங்கப்பட்டன. கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்கள் முன் கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக கொரோனாவால் பெற்றோரை இழந்து நிற்கதியாக நிற்கும் குழந்தைகளுக்கும் உதவும் வகையில் நிவாரண உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் படி கொரோனா நோய் தொற்றால் தாய், தந்தையினரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகையும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இரு பெற்றோர்களையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதற்கு அவர்களின் பாதுகாவலர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்கவும், அந்த உதவித்தொகை அந்த குழந்தைகளின் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்.

இதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் தாய், தந்தையர்களை இழந்த மற்றும் பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகள் தொடர்பான பட்டியல் தயாரிக்கும் பணி, மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வாயிலாக இந்த பணிகள் நடந்தன.

அதன்படி கொரோனாவால் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் என ரூ.15 லட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்த 79 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் என ரூ.2.37 கோடி நிவாரணம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 2.52 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.

கொரோனா நிவாரண நிதியுதவி பெற்ற கிள்ளியூர் வட்டம், பள்ளியாடி பகுதியை சேர்ந்த  சுபிதா கூறுகையில், எனது கணவர் வினு பிரவின், கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு பணியில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்தார். எனது கணவர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த 29.5.2021 அன்று காலமானார். வருமானமும் இன்றி எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அன்றாட செலவிற்கே மிகவும் சிரமப்பட்டு வந்தோம். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தியதில் எனது மகனையும் தேர்வு செய்து எங்களது குடும்ப சூழ்நிலையினை கருத்தில்கொண்டு ரூ.3 லட்சம்  நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளார்கள்.

நிவாரணத் தொகையாக கிடைத்த ரூ.3 லட்சத்தினை வங்கியில் எனது மகன் ஜெய்டன் பெயரில்  நிலையான வைப்புத்தொகையாக போட்டுள்ளேன். இந்த உதவித்தொகை என்னுடைய மகனின் எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். நிவாரணம் வழங்கிய முதலமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் என் போன்ற தாய்மார்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

கொரோனா நிவாரண நிதியுதவி பெற்ற அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியை சேர்ந்த பயனாளி ஜாய்ஸ்மேரி கூறுகையில், எனது மகள் கொரோனா நோய் தொற்று பாதிப்பினால் கடந்த 11.10.2020 அன்று காலமானார். எனது மருமகனும் ஏற்கனவே விபத்தில் இறந்து விட்டார்.

எனது பேத்தியை படிக்க வைப்பதற்கோ, அவளின் எதிர்காலத்திற்கோ எந்தவொரு சேமிப்புமின்றி மிகவும் மனவேதனையோடு இருந்தோம். இந்த நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகையினை அறிவித்ததோடு, குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு மாதம் ரூ.3000 என குழந்தைகளின் 18 வயது வரை வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில், எனது பேத்திக்கு 5 லட்சத்திற்கான நிவாரண உதவி வழங்கினார்கள்.

எங்களது குடும்ப சூழ்நிலையினை தெரிந்துகொண்ட கலெக்டர், எனது பேத்திக்கு நாகர்கோவில் கேந்திரா வித்யாலயா பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார். தற்போது எனது பேத்தி 3-ஆம் வகுப்பு படித்து வருகிறாள். எங்களுக்கு இந்த உதவியை செய்த முதலமைச்சர், மாவட்ட கலெக்டருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.

Related Stories:

More