அறநிலைய துறை சார்பில் கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள கபாலீஸ்வரர் கல்லூரிக்கு உதவி பேராசிரியர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பணிக்கு நேரடியாக நேர்முக தேர்வு நடத்தியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலைய துறை சார்பில், சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 18ம் தேதி நேர்முக தேர்வு நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்து, அக்டோபர் 13ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து திருச்சியை சேர்ந்த முன்னாள் இணை பேராசிரியர் பாண்டியன், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். மனுவில், ‘காலியிடங்களை அறிவிக்காமல், விண்ணப்பங்களை வரவேற்காமல், இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாமல் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் சட்டவிரோதமானது. இந்துக்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் கூறியிருப்பது  அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் தேர்வு மற்றும் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் பி.முத்துகுமார் ஆஜராகி, அக்டோபர் 18ம் தேதி நேர்முக தேர்வு முடிந்து, அக்டோபர் 22ம் தேதி பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு விட்டன’ என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், காலதாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: