வேளாண் சட்டம் ரத்து குறித்த விவாதத்தில் பங்கேற்க பாஜக எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு: கூட்டத் தொடரின் முதல் நாளில் நிறைவேற்றம்

புதுடெல்லி: வேளாண் சட்டம் ரத்து விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று பாஜக எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் கூட்டத் தொடரின் முதல் நாளில் பங்கேற்பார்கள். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி தொடங்கி  டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (நவ. 28) பிரதமர் மோடி  தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 19ம் தேதி  சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி  அறிவித்தார்.

அதனால், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான  மசோதாவை, கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாளில் மாநிலங்களவையில் ஒன்றிய  அரசு அறிமுகம் செய்கிறது. இதற்கான ஒப்புதலுக்கு நேற்று முன்தினம் நடந்த ஒன்றிய  அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த கூட்டத் தொடரில் 26  புதிய மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளான வரும் 29ம் தேதி மாநிலங்களவையில் வேளாண் சட்டம் ரத்து தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

அதனால் ஆளும் பாஜக மாநிலங்களவை எம்பிக்கள் அன்றைய தினம் கட்டாயம் அவையில் இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக கட்சியின் தலைமை கொறடா சிவ பிரதாப் சுக்லா கூறுகையில், ‘மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் வரும் 29ம் தேதி நடக்கும் கூட்டத் தொடரில் கட்டாயம் அவை நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும். அன்றைய தினம் நடைபெறும் விவாதம் மற்றும் மசோதா நிறைவேற்ற நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும். பாஜக எம்பிக்கள் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மாநிலங்களவை எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்களவை பாஜக எம்பிக்களுக்கு இதுவரை கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை. இவர்களுக்கு நாளை மறுநாளுக்குள் (ஞாயிற்றுக்கிழமை) கொறடா பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: